US-China: “சீன பூஞ்சை Covid-ஐ விட மோசமானது; போருக்கு சமம்..” – அமெரிக்க நிபுணர் சொல்வது என்ன?

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட பூஞ்சை, வேளாண்-பயங்கரவாத ஆயுதமாக செயல்பட சாத்தியமுள்ளது என அமெரிக்க நீதித்துறைத் தெரிவித்துள்ளது.

புசாரியம் கிராமினேரம் (Fusarium graminearum) என்ற அந்த பூஞ்சை, மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

புசாரியம் கிராமினேரம் (Fusarium graminearum)
புசாரியம் கிராமினேரம் (Fusarium graminearum)

அமெரிக்க நீதித்துறை இந்த பூஞ்சை பயிர்களில் ஏற்படுத்தும் கால் கருகல் நோய், பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

யூன்கிங் ஜியான் என்ற சீன அறிவியலாளர், அவரது காதலி ஜூன்யோங் லியூ என்ற பெண்ணைப் பார்ப்பதற்காக 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா வந்தபோது புசாரியம் கிராமினேரம் பூஞ்சையை எடுத்துவந்துள்ளார்.

இந்த வழக்கு பற்றி பேசிய அமெரிக்காவின் சீன விவகார நிபுணர் கார்டன் ஜி சாங், சீன தம்பதி பூஞ்சையை எடுத்து வந்த செயல், அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு சமமானது என்றும், சீனா உடனான உறவுகளை முறித்துக்கொள்வது உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் Covid-ஐ விட அதிக பாதிப்புகள் ஏற்படும் சாத்தியமுள்ளது என்றும் கூறியுள்ளார்.

US - China
US – China

இந்த பூஞ்சையை ஆராய்ச்சிக்காக அமெரிக்கா எடுத்து வந்ததாகக் கூறுகிறார், FBI -ஆல் கைது செய்யப்பட்ட 34 வயது அறிவியலாளர் யூன்கிங் ஜியான்.

கார்டன் ஜி சாங்கின் முடிவுகள் மீது பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையில், இந்தப் பூஞ்சை வேளாண்-தீவிரவாத ஆயுதம் எனக் கூறும் அளவு ஆபத்தானது அல்ல என்றும், இதனால் ஏற்படும் பிரச்னைகளை பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் பிற வழிமுறைகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.