‘ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 4-வது பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லி, பெருத்த சர்ச்சையை உருவாக்கிவிட்டார், இந்தியாவின் நிதி ஆயோக் தலைவர் பி.வி.ஆர்.சுப்ரமணியம். ‘இந்தியாவின் ஜி.டி.பி, இந்த நிதி ஆண்டுக்குள் ஜப்பானின் ஜி.டி.பி-யைத் தாண்டும்’ என்று கணிப்புதான் வெளியாகியுள்ளது. ஆனால், அது நடந்துவிட்டதாகவே கூறி விட்டார் சுப்ரமணியம். ‘நான் சொன்னால்… அது கியாரன்டி’ என்று பிரதமர் நரேந்திர மோடி வேறு அதை ஆமோதித்துப் பேசி வைத்திருக்கிறார்.
இது போதாதென்று, ‘‘உலக அளவில் பல்வேறு பிரச்னைகள் நிலவினாலும், ‘உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு’ என்பதை இந்தியா தக்க வைத்துக்கொள்ளும்’’ என்று தன் பங்குக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசும், அரசாங்க அமைப்புகளும் பொருளாதாரம் குறித்து வெளியிடும் தகவல்களை மக்கள் அப்படியே நம்பிவிடுகிறார்கள். ஆனால், சில புள்ளி விவரங்களும், பொருளாதார வல்லுநர்களின் கருத்துகளும் வெளியாகும்போது, அத்தனையும் வெட்டவெளிச்சமாகி பல் இளிக்கின்றன!
‘‘வளர்ச்சியின் பலன்களை மக்களுக்குப் பகிர்வது பற்றித்தான் பேச வேண்டும். ஆனால், எண்களை வைத்து பொய்யான பிம்பங்களை உருவாக்குவதில்தான் அரசும் அதிகாரிகளும் முனைப்புடன் இருக்கிறார்கள்’’ என்று சொல்லும் பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம், “12 கோடி மக்கள் இருக்கும் ஜப்பானையும், 140 கோடி மக்கள் இருக்கும் இந்தியாவையும் நீங்கள் எப்படி ஒப்பிட்டுப் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்..? அதுவும், ‘ஜப்பானைவிட 0.001 டிரில்லியன் டாலர் மட்டுமே கூடுதலாக இந்தியா வளர்ச்சி அடையும்’ என்பது கணிப்புதான். நடக்கும் என்று உறுதியும் கிடையாது. ஆனால், ஜப்பான் எப்படி இருக்கிறது? ஜப்பான் மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் தனிநபர் வருமானம் என்ன… நம்முடைய தனிநபர் வருமானம் என்ன?
‘வேகமாக வளர்கிறோம்’ என்பதாவது உண்மையா? 8%, 9% என்றிருந்த இந்திய ஜி.டி.பி விகிதம், இப்போதெல்லாம் 6% தாண்டுவதற்கே திணறுகிறது. இந்த 6% கணக்கீட்டிலுமே பல குளறுபடிகள் இருக்கின்றன. உண்மையில், அவர்கள் சொல்வதிலிருந்து 2% அல்லது 3% குறைவாகவே இருக்கும். ஜி.டி.பி கணக்கீட்டு முறையை எப்போதுமே அரசுகள் வெளியிடுவது வழக்கம். ஆனால், பா.ஜ.க அரசு அதை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கிறது. ஆர்.டி.ஐ போட்டு கேட்டாலும் தர மறுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அவர்கள் சொல்வதையெல்லாம் எப்படி நம்புவது?” என்று கேள்வி எழுப்புகிறார்.
‘தனிநபர் வருமானம், வருமான இடைவெளி, சமூகப் பாதுகாப்பு, உற்பத்தித் துறையின் வளர்ச்சி என எல்லாவற்றிலும் பின்தங்கி இருக்கிறது இந்தியா’ என்கின்றன புள்ளிவிவரங்கள். பிறகு எங்கிருந்து, ‘வளர்ச்சி… வளர்ச்சி’ என்று கூப்பாடு போடுகிறோம்… பெருமை அடித்துக்கொள்கிறோம்-சத்தியமாகப் புரியவில்லை.