MK Stalin: `அநீதியில் கூட அரசியல் ஆதாயம்…’ – அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் முதல்வர் சொன்னதென்ன?

அண்ணாப் பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

முன்னதாக, புகார் அளிக்கப்பட்ட 5 மாதங்களில் விசாரணைகள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதனால், இந்த வழக்கில் காவல்துறை மற்றும் நீதித் துறைக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில் குற்றவாளிக்கு  30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Court

இன்று வழங்கப்பட்ட தீர்ப்ப்புக்காக நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

MK Stalin பதிவு:

“பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை!

விசாரணையின் போது, உயர் நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.

தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது.

இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்.”

சட்டப்பிரிவுகளின் படி, ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம்:

329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடந்து கொள்ளுதல் – 3 ஆண்டுகள் சிறை

126(2) – மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் – ஒரு மாதம் சிறை.

87 – வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் – 10ஆண்டுகள், ரூ.10,000 அபராதம்.

127(2) – உடலில் காயத்தை ஏற்படுத்துதல் – 1 ஆண்டு சிறை.

75(2) – விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் – 3 ஆண்டுகள்

76 – கடுமையாக தாக்குதல் – 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.

64(I) பாலியல் வன்கொடுமை – 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள்; ரூ.25,000 அபராதம்.

351(3) கொலை மிரட்டல் விடுத்தல் – 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.

238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்; 3ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.

66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் – 3 ஆண்டுகள் சிறை, ரூ.25,000 அபராதம்.