“நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்…” – இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன?

இந்த மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான தாக்குதலில் ‘எண்ணிக்கைக் குறிப்பிடாமல்’ போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

“ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கியம் அல்ல, அவை ஏன் வீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம்” என சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் (chief of defence staff of the Indian Armed Forces) அனில் சவுகான் ப்ளூம்பெர்க் தளத்துடனான நேர்காணலில் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் சொல்வதில் உண்மையில்லை!

பாகிஸ்தான் இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறுவது முற்றிலும் தவறு எனக் கூறிய அவர், குறிப்பிட்டு எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பதைக் கூற மறுத்துள்ளார்.

“நல்ல விஷயம் என்னவென்றால் நாம் திட்டமிடலில் என்ன தவறு செய்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டோம். அதை சரி செய்து அடுத்த இரண்டு நாட்களில் நமது அனைத்து ஜெட்களும் வானில் பறந்தன, தூரத்து இலக்குகளை வெற்றிகரமானத் தாக்கியிருக்கின்றன” எனப் பேசியுள்ளார் ஜெனரல் அனில் சவுகான்.

indian air force

மே7ம் தேதி மோதல் தொடங்கியதில் இருந்து, இந்திய போர் விமானங்கள் பற்றி ஒரு அரசு அல்லது ராணுவ அதிகாரி வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணு ஆயுத போரை நெருங்கவில்லை!

இந்திய ராணுவம் மோதலில் போர் விமானங்களை இழந்ததா என்பது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துவந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், 6 விமானங்களை தங்கள் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் தெரிவித்திருந்தார். எனினும் அந்த தகவலில் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவில்லை.

மேலும் சவுகான், சீனா பாகிஸ்தானுக்கு வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து தங்களால் துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடிந்ததாகத் தெரிவித்துள்ளார். நடைபெற்ற சண்டையானது அணு ஆயுத போராக மாறுவதற்கான கட்டத்தை நெருங்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.