கர்நாடக காங்கிரஸில் இருந்து விலகிய 200 இஸ்லாமிய பிரமுகர்கள்.. ராஜினாமா செய்ய காரணம் என்ன?

கர்நாடகா மாநிலத்தின் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் 200 இஸ்லாமிய காங்கிரஸினர் ஒரேநாளில் கட்சி பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

மாநில காங்கிரஸ் அரசாங்கம் இம்தியாஸ் என்கிற அப்துல் ரஹீம் கொலை வழக்கை கையாளும்விதத்தை எதிர்த்து போராட்ட நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளனர்.

ராஜினாமா செய்தவர்களில் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) பொதுச் செயலாளர் எம்எஸ் முஹம்மது மற்றும் தட்சிண கன்னட சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஷாகுல் ஹமீது ஆகிய தலைவர்களும் அடங்குவர்.

மங்களூருவின் ஷாதி மஹாலில் நடந்த கூட்டத்தைத்தில் அப்துல் ரஹீம் கொலைவழக்கில் மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் எழுந்தன. இதில் ஷாகுல் ஹமீது மாநில அரசைப் பாராட்டிப் பேசியதற்கு உட்கட்சியினரிடமே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

கூட்டத்தில் மாநில அரசாங்கம் தொடர் வகுப்புவாத கொலைகளை தடுக்க தவறியதாகவும், காங்கிரஸில் இஸ்லாமிய தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் கடுமையான வாக்குவாதங்கள் எழுந்தன.

இஸ்லாமிய தலைவர்கள் கட்சிமீது ஆழமான அதிருப்திகளை வெளிப்படுத்தியதுடன், போராட்டம் எழுந்தன. ஷாகுல் ஹமீதுடன் பல முஸ்லிம் மாநகராட்சி உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

“நாங்கள் ராஜினாமா செய்துவிட்டோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, நாங்கள் கட்சி அலுவலகத்திற்குத் திரும்பிச் செல்ல மாட்டோம்” என ராஜினாமா செய்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் முறையான ராஜினாமா கடிதங்கள் சமர்பிக்காமல், அறிவிப்பாக மட்டுமே கூறியிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்தியாஸ் என்கிற அப்துல் ரஹீம் கொலை

கடந்த மே 26-ம் தேதி பத்வால் பகுதியில் உள்ளூர் மசூதியின் செயலாளரும் ஓட்டுநருமான இம்தியாஸ், பட்டப்பகலில் அவரது வாகனத்தில் இருந்து மணல் இறக்கிக்கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் கூறுவதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இம்தியாஸ் மற்றும் அவர் உடனிருந்த கலந்தர் ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இம்தியாஸ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கலந்தர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோலட்டமஜலு பகுதியில் வசிக்கும் இம்தியாஸ் தெற்கு கனரா சன்னி கூட்டமைப்பின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த கொலை தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநில அரசு வகுப்புவாத வன்முறை தடுப்பு பணிக்குழுவை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.” என்று மாநில உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா நேற்று (மே 28) தெரிவித்தார்.