புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் பா.ஜ.க – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5-ம் ஆண்டில் உள்ளது. புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் `பெஸ்ட்’ புதுச்சேரியாக மாற்றுவோம், என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி. குறிப்பாக வியாபாரம், கல்வி, ஆன்மிகம் மற்றும் சுற்றுலா போன்றவை வளரும் என்று கூறியிருந்தார். ஆனால் புதுச்சேரியில் மதுபான வியாபாரத்தைத் தவிர மற்ற எந்த வியாபாரமும் சிறப்பாக இல்லை.

கல்வியைப் பொறுத்தவரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் மூலம் இந்தியைத் திணித்து, அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை 88 சதவிகிதமாக குறைத்து விட்டனர். அதனால் கல்வியிலும் மாநிலம் தோல்வியை சந்தித்திருக்கிறது. ஆன்மிகமாவது தழைத்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. கோயில்கள், சர்ச்கள் மற்றும் மசூதிகள் முன்பு ரெஸ்டோ பார்களைத் திறந்து, குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதுதான் ஆன்மிக வளர்ச்சியா ?
ரெஸ்டோ பார்கள் மூலம் புதுச்சேரியில் கலாசாரத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சுற்றிப் பார்க்க வருவதில்லை. குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதற்காகவே வருகின்றனர். அதனால் பிரதமர் கூறிய பெஸ்ட் புதுச்சேரி தோல்வி அடைந்திருக்கிறது. அதேபோல, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெறுவதுடன், மத்திய நிதி கமிஷனிலும் சேர்ப்போம்.

மாநில அரசின் கடன்களை ரத்து செய்வோம். மத்திய அரசு சிறப்பு நிதியைத் தரும்’ என்றெல்லாம் கூறினார் முதல்வர் ரங்கசாமி. ஆனால் அதில் ஒன்று கூட நடைபெறவில்லை. காங்கிரஸ் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் அடைந்த தோல்வியை அடுத்து, மக்களை முச்சந்தியில் நிறுத்தி ரேஷன் அரிசியைக் கொடுக்கின்றனர்.
2021-ல் 10,000 பேருக்கு அரசுப் பணிகளை வழங்குவோம் என்று கூறினர். ஆனால் 1,000 பேருக்குக்கூட வழங்கவில்லை. 2021-ல் 10,000 ஆக இருந்த அரசுப் பணி காலியிடங்கள், தற்போது 15,000 இடங்களாக அதிகரித்துவிட்டது. இந்த ஆட்சியில் முதல்வர்களும், அமைச்சர்களும் ஊழலில் திளைத்திருக்கிறார்களே தவிர, மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை.

ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள். முதல்வர் ரங்கசாமிக்கு என்ன வருவாய் ? அவருக்கு என்ன தொழில் இருக்கிறது ? ஆனால் அவர் ரூ.20 கோடியில் திருமண மண்டபம் கட்டுகிறார். அதற்கு பணம் எங்கிருந்து வந்தது ? முதல்வர் ரங்கசாமி பினாமி பெயரில் சொத்துகளை நிறைய வாங்குகிறார். சிவப்பு ரேஷன் கார்டுகளாக மாற்றித் தருவதற்கு ரூ.15,000 வசூல் செய்கின்றனர்.
மாட்டுத் தீவனம், மூட்டை மற்றும் அங்கன்வாடிகளுக்கு பொருட்கள் வாங்குவதில் ஊழல் நடைபெறுகிறது. அதேபோல அமைச்சர் நமச்சிவாயம் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கியதற்கும், அவரின் மனைவி பெயரில் சொத்துகளை வாங்கியதற்கும் ஆதாரம் இருக்கிறது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் மனைவி என்ன தொழில் செய்கிறார் ? அவர் ஜெயராம் திருமண நிலையத்திற்கு முன்பு ரூ.21 கோடிக்கு இடம் வாங்கியிருக்கிறார்.

ஊழல் செய்வர்களை விட்டுவைக்க மாட்டோம் என்று கூறும் பிரதமர் மோடி, ஊழல் மலிந்திருக்கும் இந்த ஆட்சியை வேடிக்கை பார்ப்பது ஏன் ? புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு ஆளுநர் அனுமதி தராததால்தான், ஆளுநருக்கு எதிராக ஆட்சியாளர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு கொடுத்த மரண அடி, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்” என்றார்.