SSLC Exam: “ சிவகங்கை முதலிடம்; வெற்றிக்கு காரணம்..” – மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேட்டி

பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அதுமட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் 97.49 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் பெற்றும் மாநில அளவில் முதல் பிடித்துள்ளது. இந்த சாதனையை சிவகங்கை மாவட்ட மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு

மாவட்டம் முழுவதும் 278 பள்ளிகளில் இருந்து 17,679 மாணவர்கள் (மாணவர்கள் – 8,870, மாணவிகள் – 8,809) தேர்வு எழுதினர். இதில் 17,380 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (மாணவர்கள் – 8,662, மாணவிகள் – 8,718) இதில் 175 பள்ளிகள், அதில் 79 அரசு பள்ளிகள், 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேட்டி:

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்த சாதனையைப் பெறக் காரணமான முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி. மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டலும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மானவர்களின் விடாமுயற்சியும் காரணம். திட்டமிட்ட வகுப்புகள் மற்றும் அதிகப்படியான மாதிரி தேர்வுகள் மூலம் மாணவர்கள் நன்கு தயாராகினர்.

கல்வித்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஊக்கமளித்ததும், ஆசிரியர்கள் தங்கள் பாடங்களில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க எடுத்த நடவடிக்கைகளும் இந்த வெற்றிக்கு காரணம்” என்றார்.

Exam

மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட தமிழாசிரியர்..

மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட தமிழாசிரியர் நீ.இளஙகோ, “தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின் தங்கிய மாவட்டமான சிவகங்கை, பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிகமான அளவில் கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான முன்னெடுப்பும், மாவட்ட மற்றும் மாநில கல்வி அலுவலர்களின் ஊக்கப்படுத்தலும் முக்கியக் காரணம்.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இணையவழிக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்கள். மாணவர்களும் பொறுப்புணர்வுடன் தேர்வு எழுதி ஆசிரியர்களுக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்” என்றார்