கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை ஒரு அரசுப் பேருந்து சிவகாசிக்கு புறப்பட்டது. இந்தப் பேருந்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார். அதில் சுமார் 40 பயணிகள் இருந்துள்ளனர்.

பேருந்து பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்போதே அருள் மூர்த்தியின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்துள்ளது.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கோமங்கலம் புதூர் டோல்கேட் வரை அருள் மூர்த்தி தாறுமாறாக பேருந்தை ஓட்டியுள்ளார்.
கையில் உயிரை பிடித்துக்கொண்டு பயணிகள் பதறி அலறினார்கள். தொடர்ந்து தாறுமாறாக பேருந்து ஓடியதால், பயணிகளுக்கு உயிர் பயம் வந்தது. ஒருகட்டத்தில் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தினர்.
இதுகுறித்து ஓட்டுநர் அருள் மூர்த்தியிடம், மக்கள் வாக்குவாதம் செய்தனர். ஆனால், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உளறினார்.

போதை தலைக்கு ஏறியதால், அருள் மூர்த்தி அப்படியே பயணிகள் இருக்கையில் படுத்து தூங்கிவிட்டார். இதுகுறித்து பேருந்தில் பயணம் செய்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த காவல்துறையினர் அருள் மூர்த்தியை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் அருள் மூர்த்தி மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அருள் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பேருந்தில் பயணம் செய்த மக்கள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.