Ceasefire: நேற்றிரவு காஷ்மீர் வானில் பறந்த ட்ரோன்கள்; பதட்டத்தில் மக்கள்.. ராணுவம் சொல்வதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் (Ceasefire) உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு காஷ்மீரில் ஜம்மு, சம்பா, அக்னூர் மற்றும் கதுவா உள்ளிட்ட இடங்களில் வானில் ட்ரோன்கள் தென்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் சந்தேகத்துக்கு இடமான ட்ரோன்கள் எதுவும் இல்லை என்றும், போர் நிறுத்தத்தால் அமைதியான நிலைமை நிலவி வருவதாகவும் செவ்வாய் காலையில் ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்திதளம் கூறியுள்ளது.

ANI வெளியிட்ட வீடியோவில், சாம்பா மாவட்டத்தில் வானில் சிகப்புக் கோடுகள் காணப்பட்டதாகவும், வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன்களை அழிக்கும் காட்சிகளும் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா, அமிர்தசரஸ், மற்றும் பதான்கோட் பகுதிகளிலும் இந்தியா பாகிஸ்தானின் ட்ரோன்களை வழிமறைத்ததாக இந்தியா டுடே தளம் தெரிவிக்கிறது.

ஜம்மு, உதாம்பூர் மற்றும் பதான்கோட்டில் உள்ள இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபிலும் ட்ரோன்கள் காணப்பட்டதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்
இந்தியா – பாகிஸ்தான் மோதல்

பாகிஸ்தானின் நடவடிக்கையால் ஶ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் கட்டாய மின்தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10-ம் தேதி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாகிஸ்தான் போர்நிறுத்த விதிகளை மீறியிருக்கிறது என இணையதளங்களில் விமர்சிக்கின்றனர்.

குறிப்பாக நேற்றைய தினம் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிறகு ட்ரோன் அத்துமீறல் நடந்ததாக சாடுகின்றனர் நெட்டிசன்கள். எனினும் இந்திய ராணும் தரப்பில் எதிரி நாட்டு ட்ரோன்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுவதாக செய்தி தளங்கள் கூறுகின்றன.