ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.

இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து பேசிவந்தது. இதையடுத்து கடந்த மே 10 ம் தேதி தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பஹல்கம் தாக்குதலுக்குபிறகு பிஹாரில், “தீவிரவாதிகளையும், அவர்கள் பின்னால் இருப்பவர்களையும் விரைவில் கண்டிபிடித்துக் கடுமையாக தண்டனை வழங்கப்படும்” என்று பேசியிருந்தார்.
தற்போது சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு பேசியிருக்கும் மோடி, “கடந்த சில நாட்களில் நாட்டின் திறமையையும் பொறுமையையும் நாம் அனைவரும் கண்டோம். ஆயுதப்படைகள், ராணுவம், உளவுத்துறை மற்றும் விஞ்ஞானிகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நம் ஆயுதப் படைகளின் இந்த வீரம், துணிச்சலை நமது நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும், சகோதரிகளுக்கும், ஒவ்வொரு மகள்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ வெறும் பெயரல்ல
பஹல்காம் தாக்குதல் பெரும்வேதனைக்குரிய சம்பவம். அந்தக் கொடூர தாக்குதலை நடத்திய பயங்ரவாதிகளை ஒழித்துக்கட்ட சிந்தூர் ஆபரேஷனை நடத்தினோம். பயங்கரவாதத்தை ஒழிக்க நம் ஆயுதப் படைகளுக்கு சுதந்திரம் வழங்கினோம். அவர்கள் வீரத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட்டதை நாம் எல்லோரும்க் பார்த்தோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது வெறும் பெயரல்ல, அது நம் நாட்டு உணர்வின் அடையாளம்.
மே 6 ஆம் தேதி இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை குறிவைத்தன. இந்தியா இவ்வளவு வலுவான நடவடிக்கை எடுக்கும் என்று பயங்கரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
பயங்கரவாத பகுதியை தாக்கினோம். அவர்கள் நம் பள்ளி, குடியிருப்புகளை குறிவைத்தார்கள்:
உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்த பாகிஸ்தானின் பஹாவல்பூர் மற்றும் முரிட்கேவை நாங்கள் குறிவைத்து நாம் தாக்கினோம். ஆனால், பாகிஸ்தான் இந்தியாவின் பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்தது. அதை நமது ராணுவம் துணிச்சலுடனும் எதிர்கொண்டு, அவர்களது தாக்குதல்களை முறியடித்தது.” என்றார்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையா!
தண்ணீரும் இரத்தமும் ஒன்றாகப் பயணிக்க முடியாது. அப்படி பயணித்தால் அது ஆபத்தாகிவிடும். அப்படித்தான் பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் முற்றிலும் முரணானது. அது இரண்டும் ஒரே பாதையில் பயணிக்க முடியாதது. அதுபோல பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது.
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதத்துடனான பேச்சுவார்த்தைக்குச் சமமானது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமிக்கும் இந்தியாவின் ஜம்மு – காஷ்மிர் பிரச்னையை பற்றியதாகத்தான் இருக்கும்.
இது போருக்கான காலம் அல்ல
பாகிஸ்தான் உயிர்பித்து இருக்க வேண்டுமென்றால், அது அதன் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றியாக வேண்டும். இது போருக்கான காலம் அல்ல. ஆனால் அதே சமயம் இது பயங்கரவாதத்திற்கான காலமும் அல்ல. போர் எங்கள் நோக்கமல்ல, பயங்கரவாதம் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்.
மோடியின் உரையைத் தொடர்ந்து வாசிக்க விகடனுடன் இணைந்திருங்கள்…