Operation Sindoor : `தகர்த்தெறியப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள்’ – இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந்தியா, பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைக் குறிவைத்து, அதிரடியாக நடத்தியது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று டிரோன் தாக்குதல் மே 8 ஆம் தேதி இரவு நடத்தியது. அதனை வானிலேயே தடுத்து அழித்ததாக தெரிவித்தது இந்திய ராணுவம்.

இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கு பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் காணொளியை இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ x பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் இந்திய ராணுவம் கூறியிருப்பதாவது, ”ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் மே 08 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பயங்கரவாத ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தி, அவற்றை தகர்த்தெறிந்தது.

கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அமைந்திருந்த பயங்கரவாத ஏவுதளங்கள், இந்திய பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தன. இந்திய ராணுவத்தின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையால் பயங்கரவாத திட்டங்கள் தவிடுபொடியாகின” என்று இந்திய ராணுவத்தின் பதிலடி குறித்து தெரிவிக்கப்பட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர்.