பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட சில நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவரிடம் இந்தியா – பாகிஸ்தான் சூழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அடிப்படையில் எங்களுக்கும் இந்தப் போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் போர் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என இரு நாடுகளிடமும் பேச முயற்சிக்க முடியும். அடிப்படையில் எங்களுக்குச் சம்பந்தமில்லாத, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லாத இரு நாடுகளுக்கு நடுவிலான போரில் நாங்கள் ஈடுபடப் போவதில்லை.
இந்தியாவிடமோ, பாகிஸ்தானிடமோ அமெரிக்காவால் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. எனவே, இராஜதந்திர வழிகள் மூலம் இந்த விஷயத்தைக் கையாளப் போகிறோம். இது ஒரு பெரும் போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறப் போவதில்லை என்பதே எங்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.