Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் ஆந்திர பிரதேசம் மாநிலம், ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டல் பகுதியில் புட்டகுண்டலபள்ளே கிராமத்துக்கு அருகில் உள்ள கல்லி தண்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் (Murali Naik) வீரமரணம் அடைந்துள்ளார்.

கடந்த வியாழன் (08/05/2025) இரவில் பாகிஸ்தான், காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) எல்லை தாண்டி நடத்திய தாக்குதலில் இவர் உயிரிழந்ததாக தி இந்து வலைத்தளம் தெரிவித்துள்ளது.

ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் பீரங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட பதட்டம் மிகுந்த பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த அவரை விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டுவர இயலவில்லை. காஷ்மீரிலேயே அந்த இளம் வீரர் உயிரிழந்துள்ளார்.

முரளிநாயக் எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குக்கிராமத்தைப் பார்வையிட்ட காவல் அதிகாரி தி இந்து செய்தி தளத்தில், “முரளி நாயக்கின் துணிச்சலையும் அர்பணிப்பையும் வணங்குகிறோம். அவரது தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது” எனக் கூறியுள்ளார்.

முரளி நாயக்கின் மரணம் பற்றிய செய்தி மாவட்டம் முழுவதும் பரவியதால் கல்லி தண்டா குக்கிராமத்தைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்கள் அனைவரும் ஆழ்ந்த துயரடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (09/05/2025) முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்துக்கு வருகை தரும் நிலையில், முரளி நாயக் குடும்பத்தினரிடன் இரங்கல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முரளி நாயக்கின் உடல் இறுதி சடங்குக்காக மே 10-ம் தேதி கல்லி தண்டா குக்கிராமத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.