300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறிகையில், “நமது படைகள் ஆயுத ரீதியான மற்றும் ஆயுத ரீதியிலல்லாத (Non-Kinetic) தாக்குதல்தல்கள் மூலம் அவற்றில் பெரும்பாலான ட்ரோன்களை வீழ்த்திவிட்டன.” என்றார்.

மேலும், “பதிண்டா இராணுவ நிலையத்தைத் தாக்க ஆயுதமேந்திய ஆளில்லா வான்வழி வாகனம் ஒன்று அனுப்பப்பட்டது, ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது” என்றும் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா பாகிஸ்தானின் நான்கு வான் பாதுகாப்பு தளங்களை ஆயுதமேந்திய ட்ரோன்கள் மூல்ம் தாக்கியதாகவும், அதன்மூல்ம் ஒரு ரேடார் அமைப்பை முழுவதுமான அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் ஆளில்லாத விமானங்கள் மூலம் இந்திய வான்வெளியில் அத்துமீறி தாக்க முயற்சித்ததாகவும், இந்தியாவின் S-400 ட்ரையம்ப் அமைப்புகள், பராக்-8 மற்றும் ஆகாஷ் ஏவுகணைகள், DRDO-வின் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் மூலம் அவற்றை முறியடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கர்னல் சோபியா குரேஷி
கர்னல் சோபியா குரேஷி

கர்னல் சோபியா குரேஷி, 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதலாலும், 20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ரேடியோ அலைவரிசைகளைத் தடை செய்து (Jamming) தகர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ட்ரோன்களில் பல ஆயுதங்கள் இல்லாதவை என்றும், கேமராக்கள் பொருத்தப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ட்ரோன்கள் நிலப்பரப்பை நோட்டமிடுவதற்காக அனுப்பப்பட்டவை என ராணுவம் சந்தேகிப்பதாக என்.டி.டி.வி தளம் தெரிவிக்கிறது.

சோபியா குரேஷி கூறியதன்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள லைன் ஆஃப் கன்ட்ரோல் பகுதியில், பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கி முதலான கனரக ஆயுத தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு பாதுகாப்பு படைவீரர் உட்பட 16 குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.