Operation Sindoor: `நீதி வழங்குவதற்காகவே ஆபரேஷன் சிந்தூர்; இந்தியா தயாராக உள்ளது’ – விங் கமாண்டர் வியோமிகா சிங் | Live

கர்னல் சோபியா குரேஷி: 

தாக்குதலை விவரித்த கர்னல் சோபியா குரேஷி, “இராணுவக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LoC) சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கோட்லியில் அமைந்துள்ள குல்பூர் பயங்கரவாத முகாம் மீது இந்திய ஆயுதப் படைகள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த முகாமில்தான், ஏப்ரல் 20, 2023 அன்று பூஞ்சில் நடந்த தாக்குதல், ஜூன் 9, 2024 அன்று யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீதான தாக்குதல் ஆகிய தாக்குதலுக்கு திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT)வில் பயிற்சி அளிக்கப்பட்டது.” என்றார்.

`ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலின் ஒரு பகுதியாக, இந்திய ஆயுதப்படைகள் பர்னாலாவில் உள்ள மர்கஸ் அஹ்லே ஹதீஸை (LoC-யிலிருந்து 9 கி.மீ) மற்றும் கோட்லியில் உள்ள மர்கஸ் அப்பாஸை (LoC-யிலிருந்து 13 கி.மீ) வெற்றிகரமாக குறிவைத்து தாக்கின’ – விங் கமாண்டர் வியோமிகா சிங்

விங் கமாண்டர் வியோமிகா சிங்:

தாக்குதலை விவரித்த விங் கமாண்டர் வியோமிகா சிங், “கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) முழுவதும் பரவியிருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை இராணுவம் வெற்றிகரமாக குறிவைத்து அழித்தது.

விங் கமாண்டர் வியோமிகா சிங்,

பொதுமக்களுக்கும், உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும் தவிர்க்க தீவிரவாதக் குழுக்களின் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பாகிஸ்தானின் எந்தவொரு எதிர்வினையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது” என்றார்.

`இந்தியா தனக்கிருந்த உரிமையைப் பயன்படுத்தியிருக்கிறது’

தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “ஏப்ரல் 25 அன்று, ஊடக செய்தி வெளியிட்டிலிருந்து TRF பற்றிய குறிப்பை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டது. அதுவும் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுடனான பாகிஸ்தானின் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது. எனவே, இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா தனக்கிருந்த உரிமையைப் பயன்படுத்தியிருக்கிறது. பஹல்காம் தாக்குதலை நடத்தியவர்களையும், அதற்கு திட்டமிட்டவர்களையும் எங்கள் உளவுத்துறை அடையாளம் கண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் திட்டமிட்டு, சரியானளவில் பதிலடிகள் கொடுக்கப்பட்டன.

இந்தியாவிற்கு எதிராக மேலும் தாக்குதல்கள் வரவிருப்பதாக எங்கள் உளவுத்துறை சுட்டிக்காட்டியது. எனவே, அதைத் தடுக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அதனால் இன்று காலை, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு இந்தியாவும் பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தியது.” என்றார்.

ஆபரேஷன் சிந்தூர்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் எனும் சுற்றுலா தளத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை என இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திரும்ப அனுப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

Operation Sindoor
Operation Sindoor

அதே நேரம், இரு நாட்டின் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடுமையான வார்த்தைப்போர் நடந்தது. இந்த நிலையில்தான் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் , பாகிஸ்தானின் 4 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாதக் குழுக்களில் தலைமையகங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவை குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

விளக்கும் மத்திய அரசு:

இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு துறையின் சார்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமானர் வியோம்கா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் மிகவும் கொடூரமானது. லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். ஜம்மு – காஷ்மீரின் அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதுதான் பஹல்காம் தாக்குதல். குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னிலையில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.”

தாக்குதல் நடத்தியதை பிரதமர் மோடியிடம் தெரிவிக்குமாறு தீவிரவாதிகள் கூறியிருக்கின்றனர். பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித் தனமானது. இந்தத் தாக்குதல் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இந்தத் தாக்குதலுக்கு the Resistance Front என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புகள் இதன் மூலம் நிறுவப்பட்டன.” எனத் தெரிவித்தார்.