மதுரை ஆதீனம் கார் விபத்து; கொலை முயற்சியா? – காவல்துறை சொல்வது என்ன?

“முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டது எனத் தெரிகிறது” என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரை ஆதீனம் விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆதீனம்

தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் அனைததுலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள காரில் சென்ற மதுரை ஆதீனத்தின கார் உளுந்தூர்ப்பேட்டை சேலம் ரவுண்டானாவை கடந்து சென்றபோது மற்றொரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும், கார் சேதமடைந்து, தூங்கிக் கொண்டிருந்த ஆதீனம் காயமின்றி உயிர் தப்பியதாகவும் சொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “தொடர்ந்து சமூகப்பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருவதால், வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தன்னை கொல்ல திட்டமிட்டிருக்கலாம்” என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சேதமான மதுரை ஆதீனத்தின் வாகனம்

இந்த நிலையில் மதுரை ஆதீனம் தரப்பில் பொய்யான தகவலை பரப்புவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது இச்சம்பவத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை ஆதீன மடாதிபதி 02/05/2025 அன்று சென்னைக்கு TN 64 U 4005 FORTUNER என்ற பதிவண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது உளுந்தூர்ப்பேட்டை சேலம் ரவுண்டானா அருகே மற்றொரு வாகனத்தின் மீது இடித்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் இரண்டு தரப்பினரும் சென்றுவிட்டனர்.

சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் மேற்படி மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக, அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக சேலம் ரவுண்டானா அருகே உளுந்தூர்ப்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த போது சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக சேலம் ரவுண்டானா முன்பு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை கடந்து மெதுவாக வந்துகொண்டிருந்த MARUTHI SUZUKI என்ற வாகனத்தின் மீது காலை சுமார் 09.45 மணியளவில் பக்கவாட்டில் உரசியதில் மேற்படி மாருதி வாகனத்தின் முன்பகுதியிலும் FORTUNER வாகனத்தின் இடது பின்பக்கத்திலும் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு, இரு தரப்பிலும் சுமார் 10 மணியளவில் அந்த இடத்திலிருந்து சென்று விட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்தை கொலை செய்ய முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மதுரை ஆதீனம் அவர்களே தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறி வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த FORTUNER வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனத் தெரிகிறது.

CCTV பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்று இவ்விபத்தினை ஏறடுத்தியதாக தெரிகிறது. மேலும் இச்சம்பவம் சம்பந்தமாக மதுரை ஆதீனமோ அவர்களைச் சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை.

பொய்யான தகவல்களை சமூக வலைதளத்தில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை

தற்போது இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் மதுரை ஆதீனத்தின் குற்றச்சாட்டு பலவித சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் காவல்துறையில் புகார் கொடுக்காமல் மற்றொரு சமூகத்தினர் தன்னை கொல்ல திட்டமிட்டதாக ஊடகங்களில் மதுரை ஆதீனம் கூறியதை பல்வேறு அமைப்பினரும் கண்டித்து வருகிறார்கள்.