பழம்பெருமை மிக்க காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது இளைய பீடாதிபதியாக, சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69 -வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி காலமானார். அவரைத் தொடர்ந்து 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார்.
அதன்பிறகு 6 ஆண்டுகளாக இளைய பீடாதிபதிக்கான தேர்வு நடைபெறாமல் இருந்தது. இளைய பீடாதிபதியாக இருப்பவர் மடாதிபதியாக பொறுப்பேற்று கொள்வது மரபு.

அதன்படி, காஞ்சி காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் அட்சய திருத்தியை நாளான ஏப்ரல் 30, புதன் கிழமை நடைபெற்ற நிகழ்வில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமி, சங்கர மடத்தின் 71 -வது இளைய பீடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்பிரமணிய கணேச ஷர்மா டிராவிட்டுக்கு பஞ்சகங்க தீர்த்த திருக்குளத்தில் சன்னியாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் திருக்குளத்தில் ஆதீனங்கள், சன்னியாசிகள் ஆகியோர் மிதக்கும் தெப்பத்தில் அமர்ந்து தீட்சை வழங்கும் நிகழ்வை பார்வையிட்டனர்.
அடுத்து, விஜேந்திர சரஸ்வதி சுவாமி, இளைய பீடாதிபதியான சுப்பிரமணிய கணேச ஷர்மா டிராவிட் இருவரும் காமாட்சி அம்பிகையை தரிசித்து வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதிக்கு வந்ததும், மடாதிபதி அவருக்கு `சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்’ என்ற தீட்சை நாமத்தைச் சூட்டினார்.
இதன் பின்னர் பீடாதிபதிகள் இருவரும் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து சங்கர மடத்திற்கு மங்கள வாத்தியங்களுடன் ராஜவீதி வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
சங்கர மடத்தில் மந்திர உபதேசம் செய்யப்பட்டு இளைய மடாதிபதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, டாக்டர் சுதா சேஷய்யன் உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
2533 ஆண்டு பழமையான காஞ்சி சங்கர மடத்தின் 71- வது இளைய மடாதிபதியாக சந்யாச தீட்சை பெற்றபின் “ஶ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்” என நாமகரணம் நடந்தேறியது!
வாழ்த்தி வணங்குகிறேன் @KanchiMatham pic.twitter.com/GAw17nyHxs— Arjunamurthy Ra | அர்ஜூனமூர்த்தி ரா (@RaArjunamurthy) April 30, 2025