மழலையர் பள்ளியில் சிறப்பு வகுப்பு; தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 4 வயது சிறுமி பலி.. மதுரையில் சோகம்

கேகே நகரில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (கிண்டர் கார்டன் ப்ளே ஸ்கூல்) செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உத்தங்குடியைச் சேர்ந்த அமுதன் என்பவரின் 4 வயது மகள் ஆருத்ரா பயின்று வருகிறார்.

தற்போது பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் குறிப்பிட்ட 10 குழந்தைகளுக்கு ஸ்பீச் தெரபியுடன் கூடிய சிறப்பு வகுப்பு இங்கு நடைபெற்று வருகிறது. அந்த வகுப்பில் சேர்ந்துள்ள ஆரூத்ரா இன்று காலை பள்ளிக்கு வந்துள்ளார்.

மரணம் (சித்தரிப்பு படம்)

அப்போது பள்ளி வளாகத்தில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, சரியாக மூடாமல் இருந்த 12 அடி ஆழம் தண்ணீர் இருந்த தொட்டியில் தவறி விழுந்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்த ஆசிரியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அரை மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் தொட்டியில் மூழ்கிக் கிடந்த குழந்தையை தீயணைப்பு துறையினர் வந்த மீட்டுள்ளனர். பின்பு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

தனியார் மழலையர் பள்ளி

அதைத்தொடர்ந்து காவல்துறையினரும், கல்வித்துறை அலுவலர்களும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். ஆசிரியர்களின் கவனக்குறைவாலேயே சிறுமி இறந்துள்ளதால் பள்ளி தாளாளர் திவ்யா உள்பட ஐந்து ஆசிரியர்கள் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மதுரை ஆட்சியர் உத்தரவு

இந்த சம்பவம் மதுரை கே.கே.நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், “மதுரை மாவட்டத்தில் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் அனுமதியின்றி கோடை காலப் பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது” என மதுரை ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel