“துணை வேந்தர்கள் நள்ளிரவில் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்..” – ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில், ஊட்டியில் இன்று துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டார். மேலும் , இந்த மாநாட்டில் 32 பல்கலைக்கழகங்கள் சார்பில் பிரதிநிதிகள் மட்டும் கலந்துகொண்டனர். அதேசமயம், தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் துணை வேந்தர்கள் இந்த மாநாட்டைப் புறக்கணித்தனர்.

துணை வேந்தர்கள் மாநாடு
துணை வேந்தர்கள் மாநாடு

பின்னர், இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது எனப் பல்கலைக்கழக துணை வேந்தர்களைத் தமிழகக் காவல்துறை மிரட்டியதாகப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காவல்துறை ராஜ்ஜியம் நடக்கிறதா என ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் தளப் பக்கத்தில், “முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தி, இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களைப் பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாள்களை நினைவூட்டுகிறது.

மாநில உயர்கல்வி அமைச்சர், துணை வேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பலனளிக்காத நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார். மாநாட்டு நாளில் ஒரு துணை வேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஊட்டியை அடைந்த மற்றவர்கள் தங்கிய விடுதிகளின் அறைக் கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்! இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்துகொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் மாநில பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதன் விளைவுகள், எந்தவொரு தர மேம்பாடும் மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாகவும் ஊக்கமளிப்பவர்களாகவும் மாற்றும் என்பதால் இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel