Pahalgam : ‘இந்தியாவாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும்..!’ – நியூயார்க் டைம்ஸை சாடிய அமெரிக்க அரசு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் இந்திய அளவில் மட்டுமல்ல… உலக அரங்கிலும் மிகவும் அதிர்ச்சி அளித்த விஷயம்.

அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இலங்கை என உலகின் பெரும்பாலான நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீண்டது. இந்த சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு என்ன தலைப்பு?

இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் செய்தித்தாளான ‘தி நியூயார்க் டைம்ஸ்’, “காஷ்மீரில் குறைந்தது 24 சுற்றுலா பயணிகள் போராளிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” என்று தலைப்பிட்டிருந்தது.

இந்தத் தலைப்பு பெரும் அதிர்வை கிளப்பியது. காரணம், போராளி, தீவிரவாதி – இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

நியூயார்க் டைம்ஸ் தலைப்பை மாற்றிய அமெரிக்க அரசு
நியூயார்க் டைம்ஸ் தலைப்பை மாற்றிய அமெரிக்க அரசு

போராளிகள், தீவிரவாதிகள் வித்தியாசம்

போராளி என்றால் ஒரு விஷயத்திற்காக கடுமையாக போராடுபவர்கள் ஆவார்கள்.

தீவிரவாதி என்றால் ஒரு விஷயத்திற்காக இவர்களும் கடுமையாக போராடுவார்கள் தான். ஆனால், இவர்கள் பாதை ஆயுதம் மற்றும் வன்முறை நிறைந்ததாக இருக்கும். அப்பாவி மக்களை குறிவைப்பார்கள்.

அமெரிக்க அரசின் எதிர்ப்பு

நியூயார்க் டைம்ஸின் இந்தத் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க வெளியுறவுத் துறை தனது எக்ஸ் பக்கத்தில், “ஹே, நியூயார்க் டைம்ஸ், உங்களுக்காக நாங்கள் தவறை சரி செய்துள்ளோம். இது ஒரு தீவிரவாத தாக்குதல்.

இந்தியாவாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும், தீவிரவாதம் என்று வரும்போது நியூயார்க் டைம்ஸ் யதார்த்தத்தில் இருந்து விலகிவிடுகிறது” என்று பதிவிட்டுள்ளது.

இந்தப் பதிவில் பதவிடப்பட்டுள்ள நியூயார்க் டைம்ஸ் செய்தியின் தலைப்பில் ‘போராளிகள்’ என்பதை அடித்து ‘தீவிரவாதிகள்’ என்று அமெரிக்க பாதுகாப்பு துறை மாற்றி பதிவிட்டுள்ளது.