Pahalgam Attack: தீவிரவாத தாக்குதலின் எதிரொலி; பாகிஸ்தான்மீது மத்திய அரசு எடுத்த 5 அதிரடி முடிவுகள்

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று (ஏப்ரல் 22) கொடூரமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், இந்திய கடற்படை அதிகாரி என 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவோடு இரவாக ஸ்ரீநகருக்கு விரைந்த முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் மூத்த அதிகாரிகளுடன் தீவிரவாதத் தாக்குதல் பற்றி ஆலோசனை நடத்தினார்.

Pahalgam Attack
Pahalgam Attack

மறுபக்கம், பிரதமர் மோடியும் சவுதி பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினார். அதோடு, தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் இன்று (ஏப்ரல் 23) மாலை 7 மணியளவில் தனது தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று மோடி ட்வீட் செய்தார்.

அதன்படி, குறிப்பிட்ட நேரத்தில் டெல்லியில் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உட்பட துறை சார் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 2 மணிநேரம் நீடித்தது. இந்த நிலையில் கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்திருக்கிறது.

மோடி தலைமையிலான கூட்டம்
மோடி தலைமையிலான கூட்டம்

5 முக்கிய முடிவுகள்:

1) சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து.

2) வாஹா – டாரி எல்லை உடனடியாக மூடப்படும்.

3) சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) விசாவின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதி கிடையாது. பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

4) டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து பாதுகாப்பு / கடற்படை / விமான ஆலோசகர்களை இந்தியா திரும்பப் பெறுகிறது. மேலும், இந்தப் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, ஆலோசகர்களின் 5 துணை அதிகாரிகளும் இரு தூதரகங்களிலிருந்தும் வெளியேற்றப்படுவர்.

5) தூதரகங்களிலுள்ள மொத்த 50 இடங்கள் 30- ஆகக் குறைக்கப்படும். மே 1 முதல் இது நடைமுறைக்கு வரும்.

இவை தவிர, முப்படைகளையும் தயாராக இருக்கும்படி கூறியிருக்கும் மத்திய அரசு, நாளை ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நேற்று நடைபெற்ற தீவிர தாக்குதலில் 25 இந்தியர்களும், 1 நேபாள நபரும் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.