Pahalgam Terror Attack: “அமித் ஷா பதவி விலக வேண்டும்” – திருமாவளவன் வலியுறுத்தல்!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி, பிராந்திய பேதமில்லாமல் அரசியல் தலைவர்கள் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா அஞ்சலி
உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா அஞ்சலி

இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார்.

தொடர்ந்து, “பாஜக அரசின் தவறான கொள்கை, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அவர்கள் எடுத்த நடவடிக்கை இந்த விளைவுகளை உருவாக்கியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் உளவுத்துறை தோல்வியடைந்திருப்பதைத்தான் இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

ஆர்டிகள் 370-ஐ நீக்கிவிட்டால் அங்கு பயங்கரவாதம் இருக்காது எனத் தொடர்ந்து பிரசாரம் செய்து, ‘அந்த சட்டத்தை நீக்கிவிட்டோம், பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், சுற்றுலாப் பயணிகள் தைரியமாக அங்கே போகலாம்’ என பாஜக சொன்னதை நம்பி போன சுற்றுலா பயணிகள் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே இந்த தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்று உடனடியாக பதவி விலகவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.” என்று பேசினார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு

முன்னதாக நேற்றைய தினம் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஜம்மு காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஜனநாயக மற்றும் நாகரிக சமூகத்தில் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு இடமில்லை. இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்தவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

பயங்கரவாதத்தை நிராகரித்து, அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதில் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டுள்ளது என்பதை நிரூபிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.” எனப் பதிவிட்டிருந்தார்.