`இந்தி கட்டாயம் இல்லை’ – பட்னாவிஸ் தடாலடி; மத்திய அரசிடம் ஸ்டாலின் கேட்கும் 3 கேள்விகள்!

இதுவரை தமிழ்நாடு தான் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வந்தது. இதில் இப்போது ‘பெரிய சேஞ்சை’ தந்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும், மகாராஷ்டிராவின் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ். மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று சமீபத்தில் கூறியுள்ளார். இதற்கு மகாராஷ்டிராவில் எழுந்த கண்டனங்களே முக்கிய காரணம்.

இதுக்குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸின் பயம்
தேவேந்திர பட்னாவிஸின் பயம்

அதில் அவர், “இந்தி மொழியை மூன்றாவது மொழியாக திணிப்பது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. இப்போது மகாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திரா பட்னாவிஸ் மராத்தி மட்டும் தான் அம்மாநிலத்தின் கட்டாய மொழி என்று கூறியுள்ளார்.

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிப்பது பொது மக்களிடையே எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது என்பது அவரது பயத்தின் மூலம் இது தெளிவாகிறது.

மாண்புமிகு பிரதமர்‌ மற்றும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் இதுக்குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையின் கீழ், மரத்தியை தவிர வேறு எந்த மொழியும் மகாராஷ்டிராவில் மூன்றாவது கட்டாய மொழி அல்ல என்ற அவரின் நிலைப்பாட்டிற்கு ஒன்றிய அரசு ஆதரவு தெரிவிக்கிறாதா?

முதலமைச்சர் ஸ்டாலின்

அப்படியானால், புதிய தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாம் மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா?

கட்டாயமாக மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு அநியாயமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்குமா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel