திமுக பொதுக்கூட்டம்: சீரியல் செட் பிரிக்கும்போது தவறி விழுந்து ஊழியா் பலி – திருச்சியில் சோகம்

  திருச்சி, திருவெறும்பூா் அருகே திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சாா்பில் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பட்டிமன்ற விழா நடைபெற்றது.

இந்த விழாவில், தி.மு.க-வினரை வரவேற்று வண்ண விளக்குகள், தோரணங்கள், தி.மு.க தலைவா் உருவம் பதித்த சீரியல் செட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கூட்டம் முடிந்ததும், அவற்றைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் ஒலி-ஒளி அமைப்பு நிறுவனத்தின் தொழிலாளியான நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சோ்ந்த செந்தில் (வயது: 50) என்பவா், வண்ண விளக்குகளைப் (சீரியல் செட்) பிரித்த போது, தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

பலி
பலி

இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாா்.

இதுகுறித்து, திருவெறும்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த சீரியல் செட்டுகளை பிரித்தபோது, தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து இறந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel