‘மேக் இன் இந்தியா ‘ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய ரயில்வேயின் முதன்மை ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கால்நடைகள் மோதும்போது கூட கடுமையான விபத்துகளுக்கு ஆளாகிறது என ரயில்வே பாதுகாப்பு அறிக்கை தெரிவிக்கிறது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில்,“ ரயிலின் வழக்கமான என்ஜின்களை விட இலகுவாக இருக்கிறது.
அதனால் அதிக வேகத்தில் செல்லும்போது கடுமையாக சேதமடைய வாய்ப்புள்ளது. மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் நிலையில், மனிதர்கள், கால்நடைகள் குறுக்கிடுவதை தடுக்க வலுவான வேலிகளை நிறுவ வேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர்களை நிறுத்துதல், வழக்கமான ரோந்துப் பணிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை தண்டவாளங்களில் பாதுகாப்பாக நகர்த்த அனுமதிக்கும் வகையில் சுரங்கப்பாதைகள் அமைத்தல் வேண்டும்” எனப் பரிந்துரைக்கிறது.
இந்த ரயில்வே ரயில்வே பாதுகாப்பு அறிக்கையைக் குறிப்பிட்ட மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம்! வந்தே பாரத் ரயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை. வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே” ரயில்வே துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.
