‘கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கத்தி கொண்டு வருகிறார்கள்’ – தமிழிசை

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியதாவது…

“தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இன்று திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுப்பொருட்கள் கலந்து ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சுத்தமான குடிநீர் கூட…

இந்த விஞ்ஞான நூற்றாண்டில் கூட நல்ல குடிநீரை வழங்க ஸ்டாலின் அரசால் முடியவில்லை. இதற்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள்.

இது கற்காலம் அல்ல. இந்தக் காலத்தில் சுத்தமான குடிநீரை ஒரு அரசால் தர முடியவில்லை என்றால் அது மிகவும் வருத்தத்தற்குரிய விஷயம்.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ரவி

‘அப்போது’ ஆளுநர் வேண்டும்… ‘இப்போது’ வேண்டாம்

மக்கள் மீது கவனம் செலுத்தாமல், ஆளுநர் போஸ்ட் மேன், மற்றவர்கள் எதற்கும் உபயோகம் இல்லாதவர்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆளுநர் போஸ்ட்மேனாக இருந்தால் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தப்போது ஏன் அவரிடம் சென்று கோரிக்கைகளை வைத்தீர்கள்? ஏன் ராஜ்பவன் படிகளை மிதித்தீர்கள்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநர் வேண்டும்… ஆளும் கட்சியானப்பின் ஆளுநர் வேண்டாம். அரசியலமைப்பு சட்டத்தில் அந்தந்தப் பதவிகளுக்கு இருக்கும் மரியாதையை நாம் கொடுக்க வேண்டும்.

அறிவாற்றல்… அரிவாள்…

தொடர்ந்து திமுக மக்கள் விரோதப் போக்கில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கத்தியைக் கொண்டு வருகிறார்கள். அறிவாற்றல் நிகழவேண்டிய பள்ளியில் அரிவாள் நடமாடுகிறது.

பட்டியலின குழந்தை ஒன்றும், இன்னொரு குழந்தையும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சாதிய பாகுபாடு தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.

திருமாவளவன்

வேங்கைவயலில் எந்த நியாயமும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அண்ணன் திருமாவளவனுக்கு எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. சமூக நீதி பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சமூக நீதி இல்லை என்பது தெரிந்துகொண்டிருக்கிறது.

அதனால், முதலமைச்சர், ‘அந்த மாநிலத்தைப் பாருங்கள்… இந்த மாநிலத்தைப் பாருங்கள்… அந்தப் பிரச்னையைப் பாருங்கள்… இந்தப் பிரச்னையைப் பாருங்கள்’ என்று சொல்வதை விடுத்து தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளைப் பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

திருச்சி உறையூர் சம்பவம் குறித்து முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.