`StartUp’ சாகசம் 20 : `உள்ளூரில் பெயரெடுத்தால், ஏற்றுமதி தானே நடக்கும்’ – இனியா ஆர்கானிக் மசாலா கதை!

தமிழ்நாட்டின் சமையலறைகள் மசாலாப் பொருட்களின் நறுமணத்தால் எப்போதும் நிரம்பியிருக்கும். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்த உணவுப் பழக்கத்தில், புதிய வணிக வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன என்பது பலரும் அறியாத உண்மை.

சமீப காலமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் மசாலாப் பொருட்களில் கலப்படம் மற்றும் நீண்ட நாள் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், புதிதாக அரைத்து விற்கப்படும் மசாலாப் பொருட்களுக்கான தேவை மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் வாய்ப்பை நமக்கு உணர்த்துகிறது. புதிய மசாலாப் பொருட்கள் வணிகத்தில் பலவிதமான வாய்ப்புகள் உள்ளன

மசாலா

விவசாயிகள் மற்றும் உள்ளூர் சந்தைகளுடன் நேரடித் தொடர்பு கொண்டு, தரமான, பூச்சிக்கொல்லி இல்லாத மசாலாப் பொருட்களைப் பெற்று, அவற்றைப் புதியதாக அரைத்து விற்பனை செய்யலாம். இது வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான மசாலாப் பொருட்களை வழங்க உதவும். இதனால் உள்ளூர் விவசாயிகளுக்கு விவசாய வாய்ப்பும், மதிப்புக்கூட்டி விற்பவர்களுக்கு தொழில் வாய்ப்பும் கிடைக்கும், இதனால் வேலை வாய்ப்பும் பெருகும்.

சாம்பார் பொடி, ரசப்பொடி, குழம்புப் பொடி போன்ற அடிப்படை மசாலாப் பொடிகளுடன், மீன் குழம்பு பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா போன்றவற்றுடன் கீரைகள் சார்ந்த பொடி வகையும் உண்டு.

ஒவ்வொரு பகுதியின் உணவுப் பழக்கத்திற்கும் ஏற்ப மசாலாக்களின் சுவையில் மாறுபாடுகளைக் கொண்டு வரலாம். உதாரணமாக, கொங்கு மண்டலத்தின் மசாலாக்கள் காரம் குறைவாகவும், செட்டிநாடு மசாலாக்கள் காரம் அதிகமாகவும் இருக்கும்.

* அரைத்த விழுதாக விற்பனை: இஞ்சி பூண்டு விழுது, வெங்காய விழுது போன்றவற்றை புதிதாக அரைத்து விற்பனை செய்வது, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாட்டின் உணவுப் பண்பாட்டில் மசாலாப் பொருட்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு சமையலிலும் மசாலாப் பொருட்கள் தவிர்க்க முடியாதவை. இந்த வலுவான அடித்தளமும், ஆரோக்கியமான உணவுக்கான மக்களின் விருப்பமும் புதிய மசாலாப் பொருட்கள் வணிகத்திற்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. சரியான திட்டமிடல், தரமான உற்பத்தி மற்றும் புதுமையான விற்பனை உத்திகள் மூலம் இந்த வணிகத்தில் வெற்றி பெற முடியும்.

ஆகவே இந்த வாரம் நாம் பார்க்கவிருப்பது நம் நாட்டில் தமது பொருளில் பேரெடுத்து ஆஸ்திரேலியா வரை ஏற்றுமதி செய்யும் இனியா ஆர்கானிக் மசாலா பற்றி தான்…!

`இனியா ஆர்கானிக் மசாலா எப்படி ஆரம்பிக்கப்பட்டது?’

“நான் சுதா, என் கணவர் குமார் சண்முகம் ஆகிய இருவரும் இணைந்துதான் இனியா ஆர்கானிஸ் மசாலா ஆரம்பித்தோம்

M.Sc தாவரவியல் படிச்சிருக்கேன், உடன் ஆசிரியர் பயிற்சி முடிச்சிருக்கேன், ஏதாவது ஒரு பிசினஸ் பண்ண முடியுமா ? ஒரு பையன், பெண் குழந்தை, பெரிதாக முதலீடு இல்லாமல் என்ன பண்ணலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் என் குழந்தைகள் கீரை போன்ற சத்து மிக்கவற்றை சாப்பிடாமல் இருந்தபோது இவர்களை சாப்பிட வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன், அப்போது ஒரு ஐடியா தோன்றியது.

புதினா, முருங்கை, கொத்தமல்லி போன்றவற்றை பொடி செய்து இட்லி, தோசையுடன் கலந்து கொடுத்தேன். அதன்பின் குழந்தைகள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தனர். அதன்பின்னர் வீட்டிற்கு வருபவர்களுக்கும் கொடுத்து அனுப்ப அவர்கள் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவர்கள் திரும்ப திரும்ப ஆர்டர்கள் கொடுக்க, நாங்கள் இவற்றை சிறிய அளவில் செய்து விற்க ஆரம்பித்தோம். அதன்பின்னர் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின்னர் பழனியப்பன் அண்ணா என்பவர், சென்னையில் `ஆர்கானிக் கடை நடத்திக் கொண்டிருந்தார்.அவர் கடைக்கு இட்லி , பருப்பு பொடிக்கு எங்களிடம் தொடர்ந்து ஆர்டர் வழங்கினார் , அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக துவங்கியது தான் எங்கள் பயணம். இதில் இன்னொரு விசயம் என் அம்மா எனக்கு மசாலாப்பொடி அரைத்துக்கொடுப்பார், நான் சொந்தமாக மசாலாப் பொடி செய்ய ஆரம்பித்தபோது அம்மா செய்முறையை அருகில் இருந்து கற்றுக்கொண்டேன், இப்படித்தான் எங்கள் இனியா ஆர்கானிஸ் மசாலா துவங்கியது. அதில்லாமல் இன்று என் தொழிலுக்கு உறுதுணையாக என் கணவரும் இருப்பதால் இன்னமும் என்னால் முன்னேற முடிகிறது.

“சந்தையில் நிறைய மசாலாப்பொருட்கள் இருக்கிறதே அவற்றிலிருந்து உங்கள் பொடி வகைகள், மசாலாப்பொடி எப்படி வேறுபடுகிறது?”

“மசாலா பொடிகள், கீரை வகைகளில் இட்லி சாத பொடிகள், உடனடி சூப் பொடிகள், சத்து மாவு வகைகள் என செய்ய ஆரம்பித்ததும் நீங்கள் கேட்ட கேள்வி எனக்குள்ளும் எழுந்தது.

மற்றவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று…

எல்லாவற்றுக்கும் செய்முறைதான் வித்தியாசம், என் அம்மா என் பாட்டி ஆகியோர் உருவாக்கிய அதே முறையை நானும் பின்பற்றுகின்றேன். இதனால் பாரம்பரிய செய்முறை தொடர்கிறது அதுவும் ஒரு காரணம்.

அதன்பின், மூலப் பொருட்கள் வாங்க நஞ்சில்லா முறையில் விவசாயம் செய்தும் உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்கள் வாங்க ஆரம்பித்தோம். இதுவும் எங்களுக்கு உதவியது.

முதலில் பேக்கேஜிங்கில் பாலிதீன் பாக்கில் கொடுத்தோம். பிறகுதான் ஈகோ பிரின்ட்ன்லி எனப்படும் எளிதாக மக்கும் அட்டையில் இனியா என்ற பிராண்டு உருவாக்கி அதில் கொடுக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் நண்பர்கள் வட்டம் மட்டும் விற்பனை செய்து வந்தோம், இப்போது ஆர்கானிக் கடைகளுக்கு இப்போது மொத்தமாகவும் கொடுத்து வருகிறோம்.

எங்கள் பிராண்டில் கொடுக்கும் முன்பு அத்தியாவசியமான தேவையான ஆவணங்கள் எங்கள் பெயரில் எடுத்து விட்டோம்.இவையெல்லாம் எங்கள் வித்தியாசத்திக்குக் காரணம்”

“மசாலா தயாரிக்கும்போது நிறைய இயந்திரப்பயன்பாடு இருக்கும், அதை நீங்கள் எப்ப்ஃடி மேலாண்மை செய்கின்றீர்கள்?”

“கீரைகள், பருப்பு வகைகள், நறுமணப் பொருட்கள் என தேடித்தேடி கண்டுபிடித்தோம்.

அம்மா, பாட்டி அவர்களின் செய்முறைகள் மூலம் துவங்கினோம். ஒரு கட்டத்தில் அங்கீகரிப்பட்ட நிறுவன உணவுப் பொருள் உற்பத்தி செய்முறை சார்ந்த பயிற்சிகள் தேவை என்பதை உணர்ந்தோம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் வழியே பெண்களுக்கு நடத்தப்படும் மசாலா பொடி வகைகள் தயாரிப்பு ,உடனடி உணவுகள் தயாரிப்பு வகுப்புகள் எங்களுக்கு மிக உபயோகமாக இருந்தது.

Rural Self Employment Training Institute (RSETI) மூலம் நடத்திய 30 நாள் வகுப்புகள், ஈஷா மண் காப்போம் இயக்கம் நடத்திய பயிற்சி வகுப்புகள் என பயிற்சிகள் இன்னும் நல்ல முறையில் பொருட்கள் தயாரிக்க உதவியது. இந்தப் பயிற்சிகள் எல்லாம் எங்களை இன்னமும் வலுவூட்டியது அதே சமயம் இயந்திரப் பயன்பாடுகள் பற்றியும் அறிந்துகொண்டேன்

“முக்கியமான கேள்வி , குடும்பத்தில் நிறைய சிரமங்கள் இருக்கும்போது சுயதொழில் முனைவோருக்கு முதலீடு பெரும் சிரமமாகவே இருக்கும், அதை எப்படி சமாளித்தீர்கள்?”

“முதலில் தொழில் ஆரம்பிக்கலாம் எனும்போதே எங்களுக்கு சிரமம் இருந்தது, ஏற்கனவே சொன்னதுபோல் குழந்தைகள், குடும்ப நிதி நிர்வாகம் சற்று சிரமமாகத்தான் இருந்தது, இந்த இடத்தில் நண்பர்கள் சிலர் வட்சியில்லாமல் கடன் கொடுத்தனர், அது எங்கள் துவக்கத்திற்கு உதவியது, இன்னொரு பக்கம் பேக்கேஜிங்கில் சில மாற்றங்கள் செய்யலாம் எனும்போது அதற்கும் மூலதன சிக்கல் ஏற்பட்டது, அதன்பின் மதுரையை சேர்ந்த பேக்கேஜிங் செய்து தரும் நிறுவனமான ஷேப்பர் ஸ்டுடியோ பணம் செலுத்த எங்களுக்கு அவகாசம் கொடுத்தார்கள், இப்படி எல்லாருமே உதவியதால் உங்களுக்கு இந்த தொழில்முனைவு சாத்தியமானது.

பிரதம மந்திரி கடனுதவி திட்டம்(PMFME) வழியே மசாலா பொடி அரைக்கவும், வறுக்குவும் இயந்திரங்கள் வாங்க முடிந்தது. எங்கள் வீட்டிலிருந்து ஒரு சிறிய இடத்தில் இந்த இயந்திரங்களை வைத்து உற்பத்திக் கூடம் அமைத்திருக்கிறோம்.

EDII periyakulam incubation forum இல் உறுப்பினர் ஆக ஆகி இருக்கிறோம். அங்கிருந்து வழிகாட்டுதல் கிடைகின்றது.

பெரும்பாலும் நாங்கள் ஆர்டர் கிடைத்த பின் தான் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கின்றோம். ஒவ்வொரு முறையும் பொருட்களின் தரம், உற்பத்தி முறைகளை நேரில் சென்று பார்த்து உறுதி செய்து கொள்கிறோம்.

எங்களுடைய இணைய தளம் `iniyaorganics.com’ எங்கள் எல்லா பொருட்களும் கிடைக்கும் வகையில் உள்ளது.

`இந்தத் தொழிலில் நீங்கள் மறக்கமுடியாத ஒரு விசயம் எது?’

“நிறைய இருந்தாலும், இப்போது நாங்கள் எங்கள் இனியா ஆர்கானிக்ஸ் மசாலாவை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றோம், எல்லாருக்கும் ஏற்றுமதி என்பது கனவு. அது எங்களைத்த் தேடி வந்தது, ஒரு இணையதளத்தில் எங்களைப் பற்றி வந்த செய்திகளைப் பார்த்த பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து அழைத்த தமிழ்நாட்டுக்காரர் எங்களுக்கு முழுமையாக வழிகாட்டி எங்களை முதன்முதலில் ஆஸ்திரேலியாவுக்கு அரசு ஆவணங்களுடன் ஏற்றுமதி செய்ய வழிகாட்டினார், இதற்கு முன்னரும் நிறைய பேர் எங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லி எதுவும் செய்யமாட்டார்கள் ஆனால் இப்போது இது எங்களுக்கு சாத்தியமானது

அடுத்த இலக்கு என்ன?

“கொஞ்சம் பெரிய இடத்தில் உற்பத்தி கூடம் அமைக்கணும், இன்னும் கொஞ்சம் தேவையான அரவை இயந்திரங்கள் , பேக்கிங் இயந்திரங்கள் தேவை இருக்கிறது. பத்து முதல் பதினைந்து பெண்களுக்கு வேலை வாய்ப்பு, இந்த வருடத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்குரிய வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம்.

நிலத்திற்கு மாசு எற்படுத்தாத பேக்கிங் முறைகள், இயற்கை வேளாண் உற்பத்தி முறைகளில் பெறப்பட்ட மூலபொருட்கள், உடனடியாக சமைக்கக் கூடிய சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் என்பது தான் இப்போதைய எங்கள் நோக்கமாகவும் செயலாகவும் இருக்கிறது. விரைவில் அதையும் நடத்திக் காட்டுவோம்” என்கின்றனர் சுதா – குமார் சண்முகம் தம்பதியினர்.

வழக்கமாக, எங்கள் அக்ரிசக்தியில் ஏற்றுமதி குறித்து கேள்வி கேட்கும் பலருக்கும் நான் சொல்லிய கருத்து, `உள்நாட்டில் நல்ல பெயர் எடுத்துவிட்டால் வெளிநாடுகளில் இருந்து தானாகே ஏற்றுமதி செய்ய வழி உருவாகும்.. எனவே உள்நாட்டு விற்பனையில் நன்றாக கவனம் செலுத்துங்கள்’ என்பேன், அப்படித்தான் இனியா ஆர்கானிக்ஸ் மசாலாவும் உள்நாட்டில் நல்ல பெயர் எடுத்ததால் இதெல்லாம் சாத்தியமாயிருக்கின்றது

தமிழ்நாட்டின் மணக்கும் சமையலறைகளில் உங்கள் வணிகத்திற்கான நறுமணத்தை விதைக்க இதுவே சரியான தருணம். புதிய மசாலாப் பொருட்கள் வணிகத்தில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நீங்களும் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறலாம்.!