வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் அருகிலேயே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரு பள்ளிகளுக்கும் அருகிலேயே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. 1116 என்ற கடை எண் கொண்ட இந்த டாஸ்மாக் கடை, பள்ளிக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி அங்கேயே சாலையின் ஓரத்தில் அமர்ந்து குடிப்பதால், அந்த வழியாகச் செல்லும் மாணவ மாணவிகள் தினமும் அச்சத்துடனே கடந்து செல்வதாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், “கடந்த சில வருடங்களாக இந்த டாஸ்மாக் மதுபான கடை பள்ளிக்கு அருகிலேயே நடத்தப்பட்டு வருகிறது. ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியில் இருந்த இந்த டாஸ்மாக் கடையை பள்ளிக்கு அருகிலேயே மாற்றம் செய்து விட்டனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காலை முதல் இரவு வரை இந்த டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி இங்கே உள்ள சாலையின் ஓரத்திலேயே அமர்ந்து மது பிரியர்கள் குடிக்கின்றனர்.

இவர்கள் பொதுவெளியில் அமர்ந்து குடிப்பதினால் இந்த சாலையை பயன்படுத்தும் மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையினை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

மேலும் இந்த பள்ளிக்கு அருகில் இருக்கும் கடைகளில் போதை பொருள்கள் விற்பனை செய்வதனை தடுக்க உரிய அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையினை பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.