திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்; குட்டிகளைக் காக்க எச்சரிக்கை வளையத்தை உருவாக்கிய யானைகள் | Viral video

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ நகரில் நேற்று (ஏப்ரல் 14) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, 5.2 ரிக்டர் அளவில் ஜூலியனுக்கு தெற்கே 4 கி.மீ தொலைவில் சான் டியாகோ கவுண்டியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் அதிர்வு, லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட தெற்கு கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது.

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

இந்த நிலையில், நிலநடுக்கத்தின்போது சான் டியாகோ மிருகக்காட்சி சாலை சஃபாரி பூங்காவில் (San Diego Zoo Safari Park) ஆப்பிரிக்க யானைகள் கூட்டம், தங்களின் குட்டிகளைக் காக்க எச்சரிக்கை வளையத்தை உருவாக்கிய நிகழ்வு வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆங்கங்கே பூங்காவில் நின்றுகொண்டிருந்த யானைகள் நிலநடுக்கம் ஏற்பட்ட நொடியில் அதிர்ச்சியில் ஒவ்வொரு திசையில் ஓடி பின்னர் ஓரிடத்தில் சேர்ந்து வட்டமாக நின்றன.

இது குறித்து, சான் டியாகோ மிருகக் காட்சி சாலை சஃபாரி பூங்கா எக்ஸ் தளத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்து, “யானைகள் தனது கால்கள் மூலம் ஒலியை உணரும் தனித்துவமான திறனைக் கொண்டிருக்கின்றன. தெற்கு கலிஃபோர்னியாவை 5.2 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியபோது, யானைகள் எச்சரிக்கை வளையத்தை உருவாக்கின. இது, யானைகள் தங்கள் கூட்டத்தைப் பாதுகாக்கச் செய்யும் இயல்பான எதிர்வினை. நிலநடுக்கத்துக்குப் பிறகு, எலெஸ் நட்லுலா, ஜூலி, ம்காயா, உம்கானி, கோசி (யானைகள்) தங்கள் வழக்கத்துக்குத் திரும்பின” என்று பதிவிட்டிருக்கிறது.