சீனா: `இந்திய நண்பர்களே!’ அமெரிக்கா உடன் பகை; இந்தியாவை அணைக்கும் சீனா!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கும், சீனாவிற்கு மறைமுக போர் இருந்துகொண்டே இருந்து வந்தது. ‘பரஸ்பர வரி’ விதிப்பிற்கு பிறகு இது வெட்ட வெளிச்சம் ஆனது.

பரஸ்பர வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சீனா அமெரிக்கா மீது வரி விதித்தது. அதுமட்டுமில்லாமல், கூடுதலாக, சீன குடிமக்கள் தேவையில்லாமல் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில், சீனாவின் தூதர் சு ஃபெய்ஹோங்க்கின் சமூக வலைதள பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.

85,000 இந்தியர்கள்…

இவர், தனது எக்ஸ் தளத்தில், “இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 9-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள சீன தூதரகம் 85,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்கியுள்ளது.

இன்னும் அதிக இந்திய நண்பர்களை சீனாவிற்கு வரவேற்கிறோம். அங்கே பாதுகாப்பான, தோழமையான சீன அனுபவத்தை பெறுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

என்னென்ன சலுகைகள்?

இந்தியர்களுக்கு சீனாவிற்கு செல்வதற்கு ஏற்ற மாதிரி, விசா நடைமுறைகளில் சில சலுகைகளை அறிவித்துள்ளது சீனா. அவை…

> முன்னதாக ஆன்லைனில் அனுமதி பெறாமலேயே, வேலை நாள்களில் நேரடியாக சென்று விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

> குறுகிய காலத்திற்கு மட்டும் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு, பயோமெட்ரிக் தரவுகள் அவசியம் இல்லை.

> சீன விசா கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

> விசாவிற்கு விண்ணப்பித்தப் பிறகு, விரைவில் விசா கிடைப்பதுப்போல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே இந்தியர்கள் சீனாவிற்கு வர ஊக்குவிப்பதற்கும், அவர்கள் சீனாவிற்கு செல்லும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், விரைவுப்படுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும்.

இந்தியா – சீனா

ஏன் இந்த மாற்றம்?

கடந்த ஆண்டு இறுதியில், இந்தியா – சீனாவிற்கு இடையே நிலவி வந்த எல்லை பிரச்னை சரிசெய்யப்பட்டது. பின்னர், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியிருந்த பிரதமர் மோடி சீனாவை ‘நண்பர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

2020-ம் ஆண்டில் இருந்து மிகவும் மோசமாக இருந்த இந்திய – சீனா உறவு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறது. இதன் ஒரு பகுதியே சீனாவின் எளிய விசா நடைமுறைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இன்னொரு பக்கம், சீனா – அமெரிக்க உறவு மிகவும் மோசமடைந்து வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும் அறிவித்த சீனாவின் மீதான வரியிலேயே உறவு சிக்கல் தொடங்கிவிட்டது.

இப்போது பரஸ்பர வரிக்கு எதிராக குரல் எழுப்ப சீனா, இந்தியாவை அழைத்துள்ளது. ஆனால், இந்தியா இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை.

இந்த அறிவிப்பு, பதிவு எல்லாம் இந்தியாவை துணைக்கு சேர்க்கும் முயற்சி என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel