கோவை பிரபலமான மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் புகாரளிக்கப் பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதும் மதபோதகர் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகிய நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெபக் கூடத்தில் மத போதகராக இருந்தார். தன்னுடைய இசைக்கச்சேரி மூலம் கிறிஸ்துவ சமுதாயத்தில் நன்கு பிரபலமாகியிருந்தார். பல்வேறு மாநிலங்களில் இசைக்கச்சேரி நடத்தியிருந்தார்.

சமூகவலைதளங்களில் அவரை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். ஜெபராஜ் ஜிஎன் மில்ஸ் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டில் தன் மனைவி, மகனுடன் வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கணவன் – மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஜான் ஜெபராஜ் தலைமறைவான நிலையில், அவரை கைது செய்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக விமான நிலையங்கள், துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், கேரளா மாநிலம் மூணாறில் வைத்து கைது செய்தனர். அவருக்கு வருகிற ஏப்ரல் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பி செல்வதாக தகவல் கிடைத்தது. அதைத் தடுப்பதற்காக தான் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தோம். மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஒரு டீம் அவரின் சொந்த ஊரான தென்காசியில் தேடினர். மற்றொரு டீம் கர்நாடகா மாநிலம், பெங்களூரில் தேடினர்.

அவர் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கும் தேடுதல் வேட்டை நடத்தினோம். அப்போதுதான் அவர் இடுக்கி மாவட்டம், மூணாறில் வைத்து கைது செய்யப்பட்டார். விரைவில் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்.” என்றனர்.