இந்தியாவில் NBFC (வங்கியல்லாத நிதிச்சேவை நிறுவனங்கள்) சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. வங்கிகள் சென்றடைய முடியாத பலதரப்பட்ட மக்களுக்கும், கடைக்கோடி கிராமங்களுக்கும் நிதிச் சேவைகளை வழங்குவதில் NBFCக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறு வணிகங்கள், குறு விவசாயிகள் மற்றும் முறைசாரா துறையினருக்கு கடன் வழங்குவதில் NBFCக்கள் நன்றாக வளர்ந்துள்ளன.
வங்கிக் கிளைகள் குறைவாக உள்ள இடங்களில் நிதிச் சேவைகளை வழங்க NBFCக்கள் இந்தியாவின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குள் ஆழமாக பயணித்து நிதிச்சேவைகளை வழங்கி வருகின்றது.
NBFCக்கள் சிறு வணிகங்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சிறிய அளவிலான கடன்களை வழங்குகின்றன. இது அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தொழில் தொடங்கவும் உதவுகிறது.

உதாரணமாக, ஒரு NBFC ஒரு தெரு வியாபாரிக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும், பூ கட்டி விற்பவர்களுக்கும் அவரது கடையை விரிவுபடுத்த கடன் வழங்கலாம்.
NBFCக்கள் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய உள்ளீடுகளை வாங்கவும், விவசாயிகளுக்க சிறிய டிராக்டர்கள், பம்ப்செட்டுகள் மற்றும் பிற விவசாய கருவிகளை வாங்க NBFCக்கள் கடன் உதவி அளிக்கின்றன.
கடன் இடைவெளியை குறைக்கின்றன!
பால் பண்ணை, கோழி வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்த NBFCக்கள் உதவுகின்றன. NBFCக்கள் விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு கடன்களை வழங்குகின்றன. மேலும், அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் நிதி உதவி அளிக்கின்றன. வங்கிகள் கடுமையான விதிமுறைகள் மற்றும் பிணையங்கள் கேட்கும் நிலையில், NBFCக்கள் ஒப்பீட்டளவில் எளிதான மற்றும் விரைவான கடன் செயல்முறைகளை வழங்குகின்றன.
இந்தியாவின் விவசாயப் பொருளாதாரத்தில் சிறு விவசாயிகள் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களுக்கு NBFCக்கள் உதவி வருகின்றன.

வங்கிகள் சென்றடையாத அல்லது தயங்கும் பிரிவினருக்கு கடன் வழங்குவதன் மூலம் NBFCக்கள் பொருளாதாரத்தில் உள்ள கடன் இடைவெளியை குறைக்கின்றன.
இந்தப்பிரிவில் தமிழகத்திலிருந்து இயங்கும் ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனத்தினைத்தான் நாம் பார்க்கவிருக்கின்றோம். பிங்கே கேபிடல் நிறுவனம் கோவையிலிருந்து செயல்பட்டு வரும் நிறுவனம்.
பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் தொடர்ந்து கடன்களை வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்றனர். பிங்கே கேபிட்டல் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆனந்த் அவர்களை சந்தித்தோம்.
இனி அவருடனான உரையாடல் உங்களுக்காக
கேள்வி : “வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) துறையில் தமிழகத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் இருக்கும்போது உங்களுக்கு எப்படி பிங்கே கேபிட்டல் (Pinke Capital) நிறுவனம் துவக்கும் எண்ணம் தோன்றியது?”
“நான் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவன். எங்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. பெற்றோர் கூலி வேலைக்காக வேறு ஊருக்கு செல்ல வேண்டியிருந்ததால் என்னுடைய பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டது.
அதனால் என் அம்மா, பிள்ளைகளுக்கு படிப்பதான் முக்கியம் என ஈரோட்டுக்கே திரும்பினார். அதன் பிறகு கம்பு, ராகி உள்ளிட்ட சிறு தானியங்களை வாங்கி சந்தையில் விற்பனை செய்து, அதில் கிடைத்த வருமானத்தில் என்னைப் படிக்க வைத்தார்.
எங்கள் குடும்ப பொருளாதார நிலை முன்னேறியது. என்னுடைய அம்மா எடுத்த முடிவும், அவர்களின் உழைப்புதான் எங்களின் குடும்பத்தை முன்னேற்றப்பாதையில் பயணிக்க வைத்தது.

நானும் பல நிதி நிறுவனங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலைப்பார்த்திருக்கிறேன். மேலும் தமிழகத்தில் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பெண்களுக்கு கடன் வழங்கத் தொடங்கிய பிறகு, அவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
20 ஆண்டுகளுக்கு மேலாக நான் வேலை பார்த்தாலும் இதில் ஏதோ ஒரு குறை இருந்ததை அறிந்தேன், அது குறித்து ஆராய்ந்து அதை மேலும் வலுப்படுத்த வேண்டுமெனில், சரியான சமயத்தில் அவர்களின் தொழிலை விரிவுப்படுத்தவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் அவர்களுக்குத் தேவைப்படும் முழுமையான நிதி ஆதாரம் அவசியம்.
அதை நாம் செய்ய வேண்டுமென முடிவு செய்தேன். அதனுடைய விளைவுதான் 2021ம் ஆண்டு பிங்கே கேபிட்டல் நிறுவனத்தை தொடங்கினோம்.
கேள்வி : “தமிழ்நாட்டின் NBFC வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் என்ன தனித்துவமான சந்தை இடைவெளியை உங்கள் நிறுவனம் அடையாளம் கண்டது, மற்றும் பாரம்பரிய வங்கிகள் மற்றும் சிறு-குறு நிதி நிறுவனங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?”
“இன்று எல்லா நிதி நிறுவனங்களும் ஒரு கடன் திட்டம் புதிதாக உருவாக்கும்போது எல்லாரும் ஒரு அட்டவணை வைத்திருப்பவர்கள். அதில் அந்த கடன் திட்டம் இந்தத்தொழில் செய்பவர்களுக்கு மட்டும்தான் கொடுக்கணும். இத்தனை மாதத்தில் இவ்வளவுதான் இஎம்ஐ வாங்கணும். இவ்வளவு பேருக்குத்தான் இந்த ஊரில் கொடுக்கணும் என்றெல்லாம் திட்டமிட்டுவிட்டு அதற்கு மட்டுமே கடன் வழங்குவார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல… தேவைப்படும் கடனை (Access to Adequate Capital) முழுமையாக வழங்கவேண்டும் என்ற இலக்கோடு ஆரம்பிக்கப்பட்டது.

கடன் வாங்குபவர்கள் எல்லாருமே தொழில் துவங்குபவர்கள் அல்ல, 100 பேரில் 80 பேர் வேலை செல்பவர்களாக இருக்கலாம், மீதமுள்ள 20 பேர் மட்டும்தான் உண்மையான தொழில்முனைவோ்ர்.
அவர்கள் தனியாகவோ, கணவரோடு சேர்ந்தோ, குடும்பத்தினரோடு சேர்ந்தோ பணியாற்றுபவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் கடன் வழங்குகின்றோம். இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது என்ன தெரியுமா?
ஏற்கனவே அவர்கள் கடன் வாங்கியிருந்தால், ஏற்கனவே அதிகப்பட்ச கடன் தொகை வரம்பை அடைந்திருந்தால், கடன் வாங்கி கட்ட முடியாமல் இருக்கும் தருணத்தில் அவர்களுக்கு லோன் கிடைப்பது கடினம்.

ஆனால் நாங்கள், எங்களிடம் கடன் வாங்க வருபவர்களின் தொழில் சார்ந்த வாய்ப்பை, அந்த தொழிலில் சந்தை மதிப்பை, அதில் அந்த பொருளின் தரத்தினை பொறுத்து அவர்கள் பெறும் மொத்த தொழிலின் மதிப்பைப் பொறுத்து கடன் வழங்குகின்றோம். இதற்காக நாங்கள் எங்களுக்கு என்று தனி நெறிமுறையை உருவாக்கியிருக்கிறோம்.
ஏன் பெண்களுக்கு என்றால், அவர்கள் கடனை திரும்பி செலுத்துவதில் கவனமாக இருப்பார்கள். அதனால்தான் நாங்கள் அவர்களை இலக்காக வைத்து செயல்படுகிறோம்.”
கேள்வி : “வழக்கமாக பாரம்பரிய நிறுவனங்கள் எல்லா ஆவணங்களுக்கும் கொண்டவர்களுக்கு மட்டுமே கடன் கொடுப்பார்கள். ஆவணங்கள் இல்லாத குறைந்த வருமானம் கொண்ட கடன் வாங்குபவர்களுக்கான உங்களின் கடன் அங்கீகார செயல்முறை என்ன?”
“நாங்கள் மற்ற கடன் வழங்கும் நிறுவனங்கள் போல் அல்லாமல், கடன் வாங்குபவர் செய்யும் தொழில் அதன் சந்தையை, ஒரு வருடத்தில் எந்தெந்த மாதங்களில் அதன் விற்பனை அதிகம், எந்த மாதங்களில் அதன் விற்பனை மிக குறைவாக இருக்கும், பருவநிலைகளால் எப்படியெல்லாம் மாற்றங்கள் வரும், இதனால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் இதையெல்லாம் நாங்கள் ஒரு கணக்கீடு வைத்திருக்கின்றோம்.
இதைப்பொறுத்து நாங்கள் முழு பணத்தை அதாவது அந்த தொழிலை செயல்படுத்த/விரிவாக்க போதுமான தொகையை வழங்குகின்றோம். இதுதான் எங்கள் இலக்கு. இதை நோக்கியே நாங்கள் பயணிக்கின்றோம். இதில் ரிசர்வ் வங்கி விதிகளின்படி அடிப்படை கேஓய்சி போதுமானது.
நாங்கள் மேலே சொன்னது போல தொழில் செய்பவர்களுக்கு என்று கணக்கீடு ஒன்றை நாங்கள் வைத்திருக்கின்றோம். அந்தக் கணக்கீடுதான் எங்கள் பலம்.
ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் லோன் கேட்டு வருகிறார்கள் என்றால், அவர்கள் எந்தத் தொழிலுக்கு கடன் வாங்குகின்றார்களோ அவர்களுக்கு அந்த தொழில்தான் பிரதானதொழிலாக இருக்கவேண்டும், அந்த பெட்டிக்கடையில் சராசரி வருமானம், அது அமைந்திருக்கும் இடம் பொறுத்து அவர்களுக்கு கடன் வழங்குவோம்.
இன்னொரு பெண்மணி 5 மாடு வைத்து பால் கறக்கிறார் அவருக்கு கடன் வேண்டுமென்றால் அவர்களுக்கு என்ன மாதிரியான கடன் கொடுக்கமுடியும், அதன் வருமானம், செலவு, பால் மட்டுமில்லாமல் விவசாய நிலத்திலிருந்து வரும் விவசாய வருமானம் என அனைத்தையும் கணக்கிட்டு அதற்கு ஏற்றார்ப்போல் கடன் வழங்குகின்றோம்.
இங்கே எங்களின் தனித்துவம் என்பதே எல்லா வியாபாரத்திற்கான அதிகப்பட்ச கடன், வயது, வரம்பு, சந்தை நிலவரம், இருப்பிடம், கூடுதல் வருமானம் இன்னமும் சில தகவல்களைக்கொண்டு நாங்கள் எளிதாக அவர்கள் கேட்கும் தொகை இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து லோன் கொடுக்கின்றோம்.
அதனால் குறைவான வருமானம் கொண்டர்வர்களுக்கும் அவர்கள் எடுத்துக் கொண்ட சந்தையின்படியும் நாங்கள் கடன் வழங்குகின்றோம். இன்னொரு விஷயம் என்னவெனில் நாங்கள் கடன் வழங்குபவர்களின் ஜிபே, போன்பே போன்றவற்றை ஆராய்ந்தும் கடன் வழங்கும் முறையையும் திட்டமிட்டு வருகின்றோம்.
இதுபோன்ற அடிப்படை முறைகளே எங்கள் நிறுவனத்ததை மேலும் செயல்படவைக்கிறது. இதுதான் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

இன்னொரு உதாரணம் ஒரு பெண் தொழில்முனைவோர் தொழில் செய்ய முன்வரும்போது அவருக்கு 3 லட்ச ரூபாய் தேவை. அதை வைத்து சிறிய வாகனம் வாங்கி அதன் வழியே அவர்கள் பொருளை விநியோகம் செய்யலாம் என்பது மாதிரி இருக்கும் நிலையில் மற்ற குறுநிதி கடன் நிறுவனங்கள் கடன் வழங்காது.
அப்படியே வழங்கினாலும் அதிக வட்டியில் வழங்கும் அதிகம் ஏனெனில் அவர்கள் பார்வையில் இவர்கள் அதிக ரிஸ்க் உள்ளவர்கள். அதனால் அவர்களுக்கு 50,000 மட்டும் கொடுத்தால் போதும் என்று நினைப்பார்கள். அந்த 50,000 வாங்கி அவர்கள் அந்த வாகனம் வாங்கியிருப்பார்களா என்றால் 100% கிடையாது. மீதப்பணத்திற்கு என்ன செய்வார்கள்.
ஆனால், எங்கள் யுஎஸ்பி என்பது எங்களை நம்பி வரும் பெண் தொழில்முனைவோர்களுக்கு நாங்கள் 100% கடனைக்கொடுத்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் கொடுத்து அவர்களை இன்னமும் விரிவுப்படுத்துவதே எங்கள் இலக்கு.
ஏற்கனவே கடன் வாங்கிய தொகை இருந்தாலும் இப்போது வாங்கும் கடன் அவர்களுக்கு கடன் சுமையை அதிகரிக்குமா அல்லது வளர்ச்சியை. கொடுக்குமா என்பதையும், இங்கே கடன் வாங்கி அங்கே கொடுப்பதும், அங்கே வாங்கி இங்கே கொடுப்பதும் இருந்தால் அதை கண்டறிந்து நிலைமைக்கு ஏற்றார்போல் செயல்படுத்துகின்றோம்.”

கேள்வி : “சமீபத்திய RBI ஒழுங்குமுறைகள் தமிழ்நாட்டில் உங்கள் NBFC செயல்பாடுகளை பாதித்துள்ளனவா? குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சேவைகளை அணுகக்கூடியதாக வைத்திருக்கும் அதே வேளையில் இந்த ஒழுங்குமுறைகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?
“ஆர்பிஐ ஒழுங்குமுறைகள் அவ்வப்போது கேஓய்சி, கடன் விதிமுறைகள் என எல்லாவற்றையும் மேம்படுத்தி செயல்படுத்தியும் வருகிறார்கள். எங்களைப் பொருத்தவரை ஆர்பிஐ குறுங்கடன் நிறுவனங்களுக்கு என்ன விதிமுறைகள் வகுத்திருக்கிறதோ அப்படித்தான் நாங்கள் செயல்பட்டுவருகின்றோம்.
ஆர்பிஐ வட்டி விகிதத்தில் தலையிடுவதில்லை. மாறாக போர்டு என்ன வட்டி விகிதம் தீர்மானிக்கிறதோ அதை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் முக்கியமாக பார்க்கும் இடம் நாம் பயனாளிகளுக்கு எந்த விதமான வட்டி விகிதம், எவ்வளவு மறைமுகக் கட்டணங்கள் இல்லாமல் இருக்கும் என்பதை அவர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

செயல்பாட்டுக் கட்டணம், எவ்வளவு வட்டி, மாதம் எவ்வளவு கட்டணும் என்பதெல்லாம், நாங்கள் தெளிவாக எங்கள் பயனாளிகளுக்கு தெரிவித்துவிடுகின்றோம்.
இதைவிட முக்கியமாக ஒருவேளை பயனாளி குறைந்த கல்வித்திறன் கொண்டவர் என்றால் நாங்கள் அவருக்கு முதலில் அடிப்படை விழிப்புணர்வை வழங்கிவிடுகின்றோம். அதோடு, பரலாக நிதி மேலாண்மை விழிப்புணவர்வு கல்வியும் வழங்கி வருகின்றோம். எல்லா வகையிலும் முயற்சிகள் செய்துவருகின்றோம். எனவே RBI ஒழுங்குமுறைகள் மிக தேவையானவை. ”
கேள்வி : “குறைந்த அல்லது கடன் வரலாறு இல்லாத கடன் வாங்குபவர்களிடையே கடன் தகுதியை மதிப்பிட நீங்கள் என்ன முறைகளைப் பயன்படுத்துகிறீர்கள்? நிதி நிலைத்தன்மையைப் பராமரிக்கும் அதே வேளையில் பொறுப்பான கடன் வழங்கும் நடைமுறைகளை எவ்வாறு உறுதிசெய்கிறீர்கள்?”
“ஏற்கனவே கடன் வரலாறு உள்ளவர்களின் நிலைமைக்கு ஏற்றவாறு நாங்கள் கடன் வழங்குகின்றோம் என்பது பற்றி நான் மேலேயே குறிப்பிட்டு இருக்கிறேன்.
இதற்காக ஒரு வழிகாட்டுதல் முறையை உருவாக்கியுள்ளோம். அதேசமயம் இதுவரை அவர்கள் லோனே வாங்கவில்லை என்றாலும் அவர்கள் கடன் தகுதியை நாங்கள் மதிப்பிடுகின்றோம். பிரதான வாழ்வியல் ஆதாரம் மையமாக வைத்தே நாங்கள் செயல்படுத்துகின்றோம்.”

கேள்வி : “தமிழ்நாட்டில் என்பிஎச்சி-யின் குறைவான சேவை உள்ள இடங்களில் நீங்கள் எவ்வாறு செயல்படுகின்றீர்கள்? மக்களை அதிகப்படியான கடன் சுமைக்கு வழிவகுக்காமல் இருப்பதை எப்படி உறுதி செய்கி்ன்றீர்கள்?”
“எந்ததெந்த மாவட்டங்களில் எந்தத் தொழில் நல்ல வாய்ப்பினை பெற்றுள்ளது என்றெல்லாம் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். நாமக்கல்லில் முட்டை, விழுப்புரத்தில் பால் கறக்கும் பெண்கள் என பல விதமான பெண் தொழில் முனைவோர்களுக்கு நாங்கள் கடன் வழங்கிவருகின்றோம். தமிழகத்தில மகளிர் குழு நிதி வந்தபின் இங்கு பல விதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றது.
கிராம அளவில் கூட கடன் வழங்கும் நிறுவனங்கள் வந்துவிட்டது, தமிழ்நாட்டில் நிறைய குறுநிதி நிறுவனங்கள் வந்தாலும்கூட தொழில் செய்பவர்களுக்கு போதுமான நிதி வழங்கப்படுகின்றதா என்றால் நிச்சயம் இல்லை. நாங்கள் போதுமான நிதி என்பதில்தான் கவனம் செலுத்துகின்றோம். அதேசமயம் இந்த நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வையும் வாடிக்கையாளரிடத்தில் கொடுத்துவிடுகின்றோம்.

கேள்வி : “பிங்கே கேபிட்டல் நிதி நிறுவனத்தின் அடுத்த ஐந்து ஆண்டு இலக்குகள் என்ன?”
“அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தைத் தாண்டி, விவசாயம், மரபுசாரா எரிபொருள், மின்சார வாகனங்கள், பொது கடன் ஆகியவற்றை இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு கொடுக்கத் தயராகி வருகின்றோம்.
700 கிளைகள் வழியாக 4,000 கோடி கடன் தொகையை இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கான பெண் தொழில்முனைவோர்களை நாங்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதுவொரு விதத்தில் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலிமையாக்குகிறது.”
சாகசம் தொடரும்.!