Trump: “Countries are calling us up, kissing ***” – உலக நாடுகளை கேலி செய்த ட்ரம்ப்!

“These Countries are Calling us up, kissing my a**”

தேசிய குடியரசுக் கட்சி காங்கிரஸ் குழுவின் (NRCC) நன்கொடையாளர் விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசிய வார்த்தைகள் இவை.

உலக நாடுகள் மீதான ட்ரம்ப்பின் கடுமையான கட்டணங்கள் நேற்று (ஏப்ரல் 9) அமலுக்கு வந்துள்ளன.

இதனால் உலகத் தலைவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தத் துடிப்பதாக பெருமிதத்துடனும் கொச்சையாகவும் கூறியுள்ளார்.

Modi – Xi Jinping

வாஷிங்டன்னில் குடியரசுக் கட்சியின் முக்கிய புள்ளிகளிடம், அவரது அதிக வரி விதிக்கும் யுத்தி, உலக அரங்கில் அமெரிக்காவை ஆதிக்க நிலைக்கு எடுத்துவந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்கா கிட்டத்தட்ட ஒரு வர்த்தக போரையே தொடங்கியிருப்பதாக உலக பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

தண்டணை அளிக்கும் விதமாக ட்ரம்ப் போட்டுள்ள வரி விதிப்புகளால் உலக நாடுகள் அவருடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள துடிப்பதாகக் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளில் “They are dying to make a deal,”.

உலக தலைவர்களின் விரக்தியை கேலி செய்யும் விதமாக நக்கலாக, “தயவுசெய்து, ஐயா, ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள். நான் எதையும் செய்வேன். நான் எதையும் செய்வேன், ஐயா” என கெஞ்சுவதுபோல செய்துகாட்டியுள்ளார்.

ட்ரம்ப்பின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து, வெளிநாட்டு அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க காங்கிரஸ் கையாள வேண்டும் என முன்மொழிந்த சொந்த குடியரசு கட்சியினரையும் கேலி செய்துள்ளார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் பேரம் பேசுவது போல் நீங்கள் பேரம் பேசுவதில்லை” எனக் கூறியுள்ளார்.

ட்ரம்ப் வரி விதிப்பு

ஏப்ரல் 2ம் தேதி அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் சரமாரி கட்டணங்கள் கிட்டத்தட்ட அனைத்து நாடுகள் மீதும் குறைந்தபட்சம் 10% அடிப்படை வரியை புகுத்தியுள்ளன.

சீனா, இந்தியா போன்ற, ட்ரம்ப் கூட்டாளிகளால் “மோசமான நடிகர்கள்” என அழைக்கப்படும் நாடுகள் மீது அதிகப்படியாக வரிகள் போடப்பட்டுள்ளன.

குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தண்டனை வழங்கும்படியான 104% வரிவிதிப்பு ஏப்ரல் 8 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

முதலில் ட்ரம்ப்பின் அதிகப்படியான கட்டணங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 34% வரி விதித்தது சீனா. சீனாவின் இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வெள்ளை மாளிகை 24 மணிநேரம் அளிப்பதாகக் கூறியது.

ஆனால் சீனா அசையவில்லை. இறுதியில் சீனாவுக்கு தண்டனை அளிக்கும் விதமாக பெரும் சுமையை சுமத்தியிருக்கிறது அமெரிக்கா.

US – China

இந்த நூற்றாண்டில் இதுவரை இல்லாத வகையில், அமெரிக்கா வரி துஷ்பிரயோகத்தை எதிர்கொள்வதில் இந்தியாவும் சீனாவும் ஒரே பக்கம் நிற்கின்றன.

ஒன்றாக நிற்கும் இந்தியா-சீனா!

இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், புது டெல்லி சீனாவுடன் துணை நிற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

“சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார உறவு, ஒன்றை ஒன்று நிரப்புவதாகவும், இருவருக்கும் பலனளிக்கும் விதமாகவும் இருக்கும். அமெரிக்காவின் வரி விதிப்பு துஷ்பிரயோகத்தை எதிர்கொள்வது… இரண்டு பெரிய வளரும் நாடுகள் சிரமங்களை சமாளிக்க ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார் அவர்.

இந்திய ஏற்றுமதிகளின் மீதான ட்ரம்ப்பின் 26% வரிவிதிப்பு இந்தியாவின் சந்தையை நிலைகுலையைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.