Bihar: ஒரே நாளில் நின்றுபோன ரூ.40 லட்சம் கடிகாரம்; ஸ்மார்ட் சிட்டி திட்டம் மீதெழுந்த விமர்சனம்!

பீகார் மாநிலத்தில் திறக்கப்பட்ட ஒரே நாளில் ஓடாமல் நின்ற கடிகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் முக்கிய நகரம் பிகார் செரீப். இந்த நகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி செலவில் இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிகாரம் முதலமைச்சரின் பிரகதி யாத்திரை சமயத்தில் அவசர அவசரமாக கட்டப்பட்டது என டைனிக் பாஸ்கர் தளம் தெரிவிக்கிறது.

ஆனால் திறக்கப்பட்ட மறுநாளே திருடர்கள் கடிகாரத்தில் இருந்த காப்பர் வயர்களை திருடிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bihar கடிகார கோபுரத்தைத் திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

திறக்கப்பட்ட ஒரே நாளில் நின்றதனால் மட்டுமல்ல, அந்த கடிகாரத்தின் தோற்றத்துக்காகவும் சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டு வருகின்றது.

அந்த கடிகார கோபுரம் மிகவும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. தரமற்ற வர்ணப்பூச்சும், அரைகுறையாக முடிக்கப்பட்ட வேலைகளும் இணையவாசிகளால் தூற்றப்பட்டு வருகிறது.

“இந்த கடிகாரத்தில் அழகியலும் இல்லை, நவீனத் தன்மையும் இல்லை, அனைவரும் இதைத் திட்டித்தீர்க்கும்போது சிலர் நமக்கு ஏதோ கிடைக்கிறதே என மகிழவும் செய்கின்றனர்” என ஒரு சமூக வலைத்தள பயனர் தெரிவித்துள்ளார்.

இந்த கடிகார கோபுரத்தை மற்ற கடிகார கோபுரங்களுடன் ஒப்பிட்டும் பதிவுகள் வெளியாகி வருகின்றன.