சாத்தூர்: `வரிபாக்கி வசூலிக்க கழிவுநீர் வாகனத்தை கடை முன் நிறுத்திய நகராட்சி’ – வியாபாரிகள் வேதனை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபார கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்து தொழில் நிறுவனங்களும் நகராட்சிக்கு சொத்து மற்றும் தொழில் வரி செலுத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, வரி பாக்கி மற்றும் நீண்ட காலமாக வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு நகராட்சி வரி வசூலிப்பாளர்கள் நேரடியாக சென்று வசூல் செய்வதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது.

இடையூறு

இந்தநிலையில் சாத்தூர் பிரதான சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் தனியாருக்கு சொந்தமான டூவீலர் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த டூவீலர் நிறுவனத்தினர், கடைக்கான வாடகை மற்றும் சொத்து வரியை கோவில் நிர்வாகத்திடமும் தொழில் வரியை நகராட்சியிலும் செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சாத்தூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீரேற்றும் வாகனம், டூவீலர் விற்பனை நிறுவனத்தின் முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. அதில் ‘ஜப்தி வாகனம்’ என்ற அறிவிப்புடன் டூவீலர் நிறுவன வாயில் முன்பு இடையூறாக நிறுத்தப்பட்டதால் ஊழியர்கள்‌ அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஊழியர்கள் கேட்டதற்கு, நகராட்சிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரிபாக்கி செலுத்த வேண்டியிருப்பதாக நோட்டீஸ் நகராட்சி பணியாளர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.

சாத்தூர் நகராட்சியில் வரிபாக்கி வசூல் செய்வதற்கு இதுபோன்று கழிவுநீர் வாகனத்தை தொழில் நிறுவனத்தின் முன்பு இடையூறாக நிறுத்தி வைத்தது, வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வணிக நிறுவனத்தினர் சிலர் நம்மிடம் பேசுகையில், “இதுவரை 10 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலுத்திவந்த வரி தற்போது பலமடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு புதிய வரியின் அடிப்படையில் விதிக்கப்படும் வரி பழைய தொகையை விடவும் பன்மடங்கு கூடுதலாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளரிடம் முறையீடு செய்து வருகிறோம்.

கழிவு நீர் வாகனம்

உயர்த்தப்பட்ட வரியின் அடிப்படையில் வரி பாக்கி செலுத்துவது குறித்து எவ்வித முன் அறிவிப்பும் இல்லை. இந்தநிலையில், இவ்வாறு வணிக நிறுவனத்தின் முன்பு இப்படி கழிவுநீரேற்று வாகனத்தை வைத்து இடைஞ்சல் ஏற்படுத்துவது அடாவடியானது. இதுபோன்ற நடவடிக்கை மிகவும் வேதனை அளிக்கிறது” என ஆவேசமடைந்தனர்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks