‘StartUp’ சாகசம் 15 : `20 நிமிடங்களில் ஒரு புத்தகம் கேட்கலாம்..!’ – மேஜிக் 20 தமிழ் செய்வது என்ன?

நகரங்களில் போக்குவரத்து நெரிசலும், அலுவலக வேலைப்பளுவும் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், இந்திய வாசகர்கள் புத்தகங்களை படிப்பதற்கு பதிலாக ஒலி வடிவில் கேட்கும் முறைக்கு மாறி வருகின்றனர். இந்தியாவின் ஆடியோ புத்தகச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, பல்வேறு தொழில்முனைவோர்களுக்கும் வியாபார நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

KPMG இந்தியாவின் சமீபத்திய ஆய்வின்படி, இந்திய ஆடியோ புத்தகச் சந்தை 2022-ல் ரூ.135 கோடி மதிப்பிலிருந்து 2024-ல் ரூ.340 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 41% வளர்ச்சி விகிதம் மற்ற ஊடகங்களை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது.

– இந்தியாவில் தினமும் ஆடியோ புத்தகங்களைக் கேட்பவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

– சராசரியாக, ஒரு இந்திய பயனர் வாரத்திற்கு 5.2 மணிநேரம் ஆடியோ புத்தகங்களைக் கேட்கிறார்

– சந்தையில் 37% ஆங்கில உள்ளடக்கம், 63% இந்திய மொழிகளில் உள்ளது, அதில் இந்தி (26%), தமிழ் (12%), தெலுங்கு (9%), மராத்தி (7%) மற்றும் வங்காளம் (6%) உள்ளிட்ட மொழிகளில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமேசான் நிறுவனத்தின் ஆடிபிள், ஸ்டோரிடெல், போன்றவை இந்திய சந்தையில் முன்னணியில் உள்ளன. அதே சமயம் தென்னிந்திய மொழிகளில் உள்ளூர் நிறுவனங்கள் வலுவான முன்னேற்றம் கண்டுள்ளன.

எதிர்காலத்தில் இத்துறையில் AI மற்றும் குரல் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, வட்டார மொழிகளில் அதிக கவனம் செலுத்துதல், பதிப்பகங்கள் மற்றும் ஆடியோ தளங்களுக்கு இடையே ஒப்பந்தத்தால் வணிக முன்னேற்றம், கல்வி மற்றும் சுய-முன்னேற்ற உள்ளடக்கத்திற்கான அதிக தேவை உள்ளது.

ஆடியோ புத்தகச் சந்தை

இந்தியாவின் ஆடியோ புத்தகச் சந்தை பல வாய்ப்புகளை வழங்குகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இந்திய மொழிகளில் அதிகரித்து வரும் டிஜிட்டல் உள்ளடக்கத் தேவை ஆகியவை இந்தத் துறையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவை புதிய தொழில் முனைவோர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த ஏதுவாக உள்ளன.

அதே சமயம் “தமிழ்நாட்டில்இருந்து பணி நிமித்தமாக வந்தபின், என் தாய்மொழியில் புத்தகங்களை கேட்பது என் வேர்களுடன் தொடர்பில் இருக்க உதவுகிறது,” என்று சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு பெயர்ந்த என் நண்பர்கள் சொன்னபொது ஆச்சர்யப்பட்டேன். எங்கு சென்றாலும் தாய்மொழி பிணைப்பு நமது உணர்வுடன் கலந்தது. புலம் பெயர்ந்த தமிழர்களுக்காகவே நாம் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.

தமிழகத்தில் இருந்து புக்ஸ்பார்க் எனும் தொழில்முனைவு நிறுவனம் மேஜிக்20 தமிழ் எனும் செயலி வழியே புத்தகங்களில் இருக்கும் முக்கிய பொறிகளை 20 நிமிடங்களுக்குள் சுருக்கமாக சுயமாக கற்றுக்கொள்பவர்களை இலக்காக வைத்து செயல்படுகிறது. இது குறித்து அதன் நிறுவனர்களான அருண்பாரதி, பாலாஜி கேபி மற்றும் வாசு கார்த்திகேயன் ஆகியோரிடம் மேஜிக்20 தமிழ் செயலி குறித்து ஒரு நேர்க்காணல் நடத்தினோம்.

“உங்கள் வணிகத்தை ஆரம்பிக்கும் போது உங்கள் நோக்கம் என்ன, நீங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு சமாளித்தீர்கள்?”

“உலக அளவில் ஆடியோ புத்தகத்திற்கு தனி சந்தை உருவாகியிருக்கிறது. தமிழிழும் இதற்காக நிறைய செயலிகள் இருக்கிறது. ஆனால் எங்கள் இலக்கு புத்தகங்களில் இருக்கும் ஒரு முக்கிய பொறிகளை 20 நிமிடங்களுக்குள் சுருக்கமாக அனைவருக்கும் கொடுக்க விரும்பினோம். அந்த பொறியை 18 வயதில் இருந்து 60 வயதில் இருப்பவர்களில் சுயமாக கற்றுக்கொள்பவர்களுக்கும், வாழ்க்கையில் முன்னேற விரும்புபவர்களுக்கும், தங்கள் துறையில் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல ஆர்வமுடன் இருப்பவர்களுக்கும் பரப்ப விரும்பினோம்.

சிலருக்கு ஏற்கனவே ஒரு= ஸ்பார்க் இருக்கும் அவற்றை அணையாமல் பார்த்துக்கொள்ளவும் தான் எங்கள் நிறுவனத்திற்கு புக்ஸ்பார்க் என்று பெயர் வைத்தோம். எங்கள் செயலிக்கு மேஜிக் 20 தமிழ் என்று பெயர் வைத்து அதன் வழியே புத்தகத்தி்ல் உள்ள முக்கியபொறிகளை வாசகர்களுக்கு கடத்திவருகின்றோம். இதை தொடர்ந்து கேட்பவர்களின் சி்ந்தனை மாறும். அதனாலும் அவர்கள் வாழ்க்கையில் அற்புதம் நடக்கும். மேஜிக் 20 செயலியை பயன்படுத்திவரும் பலரும் இதை சொல்ல நாங்கள் கேட்டுவருகின்றோம்.

சவால் என்று பார்த்தால் ஆரம்பத்தில் எங்கள் செயலிக்கு சவால் இருக்கவே செய்தது. ஆனால் பயன்படுத்தியவர்கள் எங்களுக்கு நிறைய ஆலோசனைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்று புரிய ஆரம்பித்தது. அதன்பின் சந்தையின் போக்குக்கு ஏற்றவாறு நாங்கள் எங்கள் இலக்குகளை நிர்ணயித்து அதைக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மேலும் என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கங்களை கொடுக்க ஆரம்பித்தோம்.”

“உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு நீங்கள் பயன்படுத்திய விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள் என்ன?”

“ஆரம்பத்தில் எங்கள் செயலியை மக்களிடையே கொண்டுபோய் சேர்க்க சில சவால்கள் இருந்தது. ஏனெனில் இதில் மக்களை ஈர்க்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள் எதுவும் இல்லை. அறிவுத்தேடலில் இருப்பவர்களுக்கு பயன்படும். குறிப்பாக சுயமாக தேடல் இருப்பவர்களுக்கு நிச்சயமாக பயன்படும்.

ஆனால் அப்படியிருப்பவர்களைத் தேடி தேடி பணம் செலுத்தி படிக்கவைப்பதென்பது ஒரு கலை, அதை எங்கள் அனுபவத்தின் வழியே கடந்தோம். ஒரு புறம் இன்புளூயன்சர்கள் எனப்படும் சமூக வலைத்தள மதிப்பு மிக்கவர்கள் வழியே விளம்பரப்படுத்தலாம் என்று பார்த்தால் அவர்கள் முக்கால் வாசி பேர் நடனமாடியும், பாட்டு அல்லது நகைச்சுவை செய்துகொண்டிருக்கும்போது அவர்கள் வழியே விளம்பரப்படுத்துவது என்பதும் சாத்தியமில்லாமல் இருந்தது.

அதனால் நாங்கள் முக்கிய நிகழ்வுகளில் நேரடியாக காட்சி அரங்கம் அமைத்து அதன் வழியே மக்களை நேரடியாக சந்தித்தும், சமூக வலைத்தளங்களின் வழியே எங்கள் செயலியின் பயனை எடுத்துச்சொல்லி புரிய வைத்தபின் அவர்கள் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்தார்கள்.. இப்படியாகத்தான் நாங்கள் எங்கள் வணிகத்தை விரிவுப்படுத்திவருகின்றோம்.”

மேஜிக் 20 தமிழுக்கு என பாட்காஸ்ட் துவங்கினோம். அதில் வணிகத்தில் வெற்றி பெற்றவர்களை, பல போராடத்திற்குப் பிறகும் நிலைத்து நிற்பவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களின் நேர்க்காணல்களை பாட்காஸ்ட் வழியே ஒளிபரப்ப ஆரம்பித்தபின் எங்கள் வாடிக்கையாளர்களும் அதிகமானார்கள். அதன்பின் தொழில்முனைவோர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் நடத்த ஆரம்பித்தோம். எங்களுக்குத் தேவையான சமூக மதிப்புமிக்கவர்களைக் கொண்டும் நாங்கள் விளம்பரப்படுத்தினோம். இந்த சந்தைக்கு செல்லும் அணுகு முறை யுக்திகளால் எங்கள் செயலியை சந்தையில் மெதுவாக விரிவுபடுத்திக்கொண்டேயிருக்கிறோம்.”

“தமிழ்நாட்டில் ஒரு தொழில்முனைவோராக இருப்பதன் தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ன?”

“என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் தொழில் துவங்குவது வெகு எளிது. ஏனெனில் தொழில்நுட்பத்திற்கு ஆள், தமிழகம் முழுதும் கிடைப்பார்கள். தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் நன்கு படித்தவர்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அதனால் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதும் அல்ல. அவர்களை குறைத்து மதிப்பிடவும் முடியாது. விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நமது பொருளை விற்பனை செய்வது என்பது மிகவும் சவாலானது. நாம் ஒன்று சொன்னால் அதிலிருந்து அவர்கள் 10 விசயங்களை நமக்கு சொல்லித்தருவார்கள். ஆனால் இவர்களிடம் இன்னமும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் நிச்சயம் அவர்களிடம் நமது தயாரிப்பு/சேவையை விற்பனை செய்துவிட முடியும். முக்கியமான விசயம் படித்தவர்கள் நிறைய பேர் இருப்பதால் வணிகம் செய்வது எளிது. ஆனால் தமிழக வாடிக்கையாளர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது என்பதுதான்உற்றுநோக்கவேண்டியது. அது எல்லா வணிகத்திற்கும் பொருந்தும்”

“மேஜிக் 20 தமிழ்” செயலியின் முக்கிய நோக்கம் என்ன? இது மற்ற கல்வி செயலிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?”

“எங்களுடைய முக்கியம் நோக்கம் அறிவு சார் தேடலில் இருப்பவர்களின் அறிவுப்பசியை தொடர்ந்து ஊக்குவித்து அவர்களை ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு அழைத்துச்செல்ல உதவும் ஒரு கல்வியை வழங்குவதே. ஒரு நாள் நடைப்பயிற்சி செய்துஅன்னைக்கே எடை குறைப்பு நிகழாது, அதேபோல் ஒரு நாள் கற்றுக்கொண்டு அடுத்த நாள் நான் ஜெயித்துவிட்டேன் என்றும் சொல்ல முடியாது. தொடர்ந்து கற்றலிலில்தான் வெற்றி இருக்கிறது.

அந்த தொடர் கற்றலை நாங்கள் கொடுக்கிறோம். அது பங்குச்சந்தையாக இருக்கலாம், கிளைகள் அமைப்பதாக இருக்கலாம். வணிகமாடல்களை அமைப்பதாகவும் இருக்கலாம். ஆனால் அதை முழுமையாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இதுவே மற்றவர்களிடத்தில் இருந்து வேறுபடும் காரணம்.”

“புதிய ஸ்டார்ட்அப்களுக்கு “மேஜிக் 20 தமிழ்” செயலி எவ்வாறு உதவும் என்று நினைக்கிறீர்கள்? குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப்களுக்கு இதன் பயன்கள் என்ன?”

“புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு என்று மட்டும் தனியாக பிரிக்க முடியாது. ஆனால் அறிவுத்தேடலில் இருக்கும் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் மேஜிக் 20 செயலியில் ஒரு முறை கேட்பவர்களின் சிந்தனையை கொஞ்சமாக மாற்றும், தொடர்ந்து கேட்கும்போது அவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனையும் மாற்றும். பயணத்தில் சரியான இடத்தை அடைய எப்படி கூகிள் மேப் உதவுகிறதோ, உங்கள் அறிவுத்தேடலின் இலக்கை அடைய மேஜிக் 20 தமிழ் செயலி உதவும். உதாரணத்திற்கு நீங்கள் 1 கோடி ரூபாயை சந்தையை இலக்கு வைத்திருந்தால் இதை கேட்டபின் 10 கோடிக்கான சந்தையை இலக்கு வைப்பீர்கள். உங்கள் அறிவுத்தேடலை தொடர்ந்து விரிவுப்படுத்தவேண்டியது எங்கள் பணி.”

“மேஜிக் 20 தமிழ்” செயலியின் எதிர்கால திட்டம் என்ன? எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது?”

“மேஜிக் 20 தமிழ் என்பது எங்கெல்லாம் தமிழ் பேசும் சமுதாயம் இருக்கிறதோ அங்கெல்லாம் நாங்கள் இருக்கவேண்டும் என்பதே எங்கள் இலக்கு. மேஜிக் 20 தமிழ் என்ற பெயரை வைத்திருக்கிறோம் என்றால் எதிர்காலத்தில் மேஜிக் 20 தெலுங்கு, மேஜிக் 20 இந்தி என்று மற்ற மொழிகளுக்கு விரிவாக்கம் செய்ய திட்டம் உள்ளது.

தமிழ் சந்தையில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைந்தபின்னரே மற்ற மொழிகளுக்கு விரிவாக்க நாங்கள் திட்டமிடுகிறோம். அதே சமயம் புக்ஸ்பார்க் நிறுவனம் வளர வளர எங்கள் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டி வருகின்றது. அதோடு எங்கள் செயலியை பயன்படுத்த சந்தா வழியே பணம் வாங்குகின்றோம். கட்டணப் பயிற்சிகள் வழியாவும் வருமானம் ஈட்டுகின்றோம்.”

“புதிய ஸ்டார்ட்அப்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் முக்கிய ஆலோசனை என்ன?”

“உங்களுக்கு பிரச்னை தெரிகிறது, டெக்னாலஜி தெரிகிறது என்றால்லாம் தெரிந்தால் மட்டும் நிறுவனம் ஆரம்பித்துவிடக் கூடாது. உங்கள் பொருள்/சேவைக்கு பணம் வரவேண்டும். அப்போது நிலைத்து நிற்க முடியும். எங்களுடைய அனுபவத்தில் நாங்கள் சொல்வது விற்பனை, நிதி மேலாண்மை இவை இரண்டும் தெரிந்திருக்கவேண்டும். அல்லது தெரிந்த ஆள் கூட இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டும்தான் தொழில் துவங்கவேண்டும். இல்லையேல் அது நமக்கு சிக்கலை உருவாக்கிவிடும். எனவே புதிய நிறுவனங்களுக்கு நாங்கள் சொல்வது நிதி மேலாண்மை, விற்பனை இவை இரண்டையும் தெரிந்து செயல்படுத்தி பா்ர்த்த அனுபவம் பெற்றபின் தொழில் துவங்குவது சாலச்சிறந்தது.”

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play