சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், சில மாதங்களுக்கு முன்பு சினிமா பார்க்க அமைந்தகரைப் பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்குச் சென்றார். அப்போது அங்கு செக்யூரிட்டியாக வேலை செய்து வரும் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவைச் சேர்ந்த மோசஸ் (19) என்பவருடன் இளம்பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்தனர். இந்தச் சூழலில் மோசஸின் நடவடிக்கைகள் பிடிக்காததால் இளம்பெண் அவரைவிட்டு விலகியிருக்கிறார். மேலும் அவருடன் பேசுவதையும் இளம்பெண் தவிர்த்து வந்திருக்கிறார். அதனால் இளம்பெண் மீது மோசஸ் ஆத்திரம் அடைந்தார்.

இளம்பெண்ணிடம் எவ்வளவோ பேச முயன்ற மோசஸிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், இளம்பெண்ணைப் பழிவாங்கத் திட்டமிட்ட மோசஸ், இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்தார். பின்னர் இளம்பெண்ணின் தந்தையிடம் போனில் பேசி, “உங்கள் மகளும் நானும் காதலித்து வருகிறோம். அவளை எனக்கு நீங்கள் திருமணம் செய்து கொடுங்கள். இல்லையென்றால் அளவின் ஆபாச புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன்” என மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தந்தை, விவரத்தைத் தன்னுடைய மகளிடம் கூறி விளக்கம் கேட்டிருக்கிறார். அப்போது, இளம்பெண், முழு விவரத்தைக் கூறினார். இதற்கிடையில் மோசஸ், இளம்பெண்ணின் உறவினர் ஒருவருக்குச் சித்தரிக்கப்பட்ட ஆபாச போட்டோஸ்களை அனுப்பி வைத்தார். அதனால் இளம்பெண்ணின் தரப்பில் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோசஸ் மீது புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் மோசஸிடம் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றச் செயலுக்குப் பயன்படுத்தியதாக மோசஸின் இரண்டு செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
