சென்னை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை – மருத்துவர் எடுத்த விபரீத முடிவுக்கு என்ன காரணம்?

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன் (53). இவர் சென்னை திருமங்கலத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரின் மனைவி சுமதி. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்தத் தம்பதியினருக்கு ஜஸ்வந்த், லிங்கேஷ்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடன்

சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார் டாக்டர் பாலமுருகன். இவர், அண்ணாநகர் பகுதியில் இரண்டு ஸ்கேன் சென்டர்கள், செங்குன்றத்தில் இரண்டு ஸ்கேன் சென்டர்கள் ஆகியவற்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் டாக்டர் பாலமுருகன் நடத்தி வந்த ஸ்கேன் சென்டர்களை விரிவுபடுத்த 5 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஸ்கேன் சென்டர்கள் மூலம் போதிய வருமானம் வராததால் கடன் சுமையில் டாக்டர் பாலமுருகன் தவித்திருக்கிறார். வழக்கறிஞராக இருந்த சுமதியும் கணவருக்கு ஆறுதல் கூறி வந்தார்.

டாக்டர் பாலமுருகன், அவரின் மனைவி சுமதி

இந்தநிலையில் இன்று காலை (மார்ச் 13) டாக்டரின் வீட்டுக்கு வேலைக்கார பெண் ரேவதி, வழக்கம் போல வந்திருக்கிறார். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் ரேவதி கதவை நீண்ட நேரமாக தட்டியிருக்கிறார். பின்னர் டாக்டர், அவரின் மனைவிக்கு ரேவதி போன் செய்திருக்கிறார். ஆனால் எந்தவித பதிலும் இல்லை.

விபரீத முடிவு

இதையடுத்து ரேவதி, டாக்டர் வீட்டின் டிரைவர் விஜய்க்கு போன் செய்து விவரத்தைக் கூறியிருக்கிறார். இதையடுத்து விஜய் அங்கு வந்து அவரும் கதவை தட்டியிருக்கிறார். அப்போதும் யாரும் கதவை திறக்கவில்லை. அதனால் கதவை உடைத்து உள்ளே சென்ற போது மின்விசிறிகளில் டாக்டர் பாலமுருகன், அவரின் மனைவி சுமதி, மகன்கள் ஜஸ்வந்த், லிங்கேஷ்குமார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், ரேவதி ஆகியோர் உடனடியாக திருமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், நான்கு பேர்களின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து டாக்டரின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கிடைத்த தடயங்களை போலீஸார் சேகரித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சடலம்

கடன் சுமை

இதுகுறித்து திருமங்கலம் போலீஸார் கூறுகையில், “டாக்டர் பாலமுருகனின் மூத்த மகன் ஜஸ்வந்த், பிளஸ் டூ படித்துவிட்டு மருத்துவம் படிக்க நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்தார். இரண்டாவது மகன் லிங்கேஸ்குமார் அண்ணாநகரில் உள்ள பிரபலமான பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். டாக்டர் பாலமுருகனுக்கு கொளத்தூரில் சொந்த வீடு உள்ளது. ஆனால் அவர் திருமங்கலத்தில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவர் நடத்தி வந்த ஸ்கேன் சென்டர்களை விரிவுப்படுத்த 5 கோடி ரூபாய் கடன் வாங்கிய நிலையில் அதற்கு மாதம் 6 லட்சம் ரூபாய் வரை வட்டி செலுத்தி வந்திருக்கிறார். ஆனால் ஸ்கேன் சென்டர்கள் மூலம் கிடைத்த வருமானம் வட்டி செலுத்தவே போதவில்லை என தெரியவந்திருக்கிறது. அதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இதில் மனவிரக்தியடைந்த பாலமுருகன் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்.

நாங்கள் வீட்டுக்குள் சென்றபோது நான்கு பேரும் தனித்தனியாக புடவையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும். மற்றப்படி இரண்டு மகன்களையும் டாக்டர் பாலமுருகன் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டார் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை” என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel