சென்னையில் பிரபலமான ‘உதயம் தியேட்டர்’ மூடப்பட்டது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது, வட சென்னையில் தண்டையார் பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த எம்.எம் தியேட்டர், பெரம்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீபிருந்தா தியேட்டர் என இரண்டு முக்கியமான தியேட்டர்கள் மூடப்படுவது சினிமா ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.
‘ஶ்ரீ பிருந்தா தியேட்டர்’ வட சென்னையில் தொடங்கப்பட்ட முதல் ஏ.சி தியேட்டர் ஆகும். ஶ்ரீ பிருந்தா தியேட்டர் 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லோகநாதன் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டு, நடிகர் ரஜினிகாந்தால் திறக்கப்பட்டது. இந்தத் தியேட்டரை மக்கள், ‘ரஜினி தியேட்டர்’ என்று தான் அழைப்பார்கள். ரஜினிகாந்தின் அனைத்து படங்களும் இந்த தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. அதனால் தான் இந்தப் பெயர். அதில் மாப்பிள்ளை படம் 200 நாள்களை தாண்டியும், பாண்டியன் மற்றும் அண்ணாமலை ஆகிய படங்கள் 100 நாள்களை தாண்டியும் ஓடியுள்ளது.
கிட்டதட்ட 40 ஆண்டுகளை கடந்த இந்த தியேட்டர் இருக்கும் இடம் சென்னையின் பெரம்பூர். இது சினிமாஸ்கோப்பில் இருந்து லேட்டஸ்ட் டிஜிட்டல் புரொஜெக்சன் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் கடந்து உள்ளது.
உதய கீதம் திரைப்படத்தோடு தொடங்கிய இந்தத் தியேட்டரின் பயணம், கடந்த திங்கள் கிழமை இரவு டிராகன் திரைப்படம் திரையிடப்பட்டதோடு முடிந்துள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
