நண்பனை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்ற இளைஞர்… சென்னையில் நடந்த கொடூரம்

சென்னை கொருக்குப்பேட்டை, பி.பி.சி.எல் (BPCL) சுற்றுசுவர் அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பி.பி.சி.எல் காம்பவுன்ட் சுவருக்கும் கழிவு நீர் செல்ல அமைப்பதற்காக போடப்பட்டிருந்த இரும்பு குழாய்க்கும் நடுவில் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது. அதனால் அந்தப் பகுதியை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் கண்காணித்தார்.

அப்போது கழிவுநீர் கால்வாய் அருகில் கொட்டப்பட்டிருந்த கட்டிட கழிவுகள் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவில் ஆண் சடலம் கிடந்தது. அந்த சடலத்தின் கை, கால்கள், வாய் ஆகியவை துணியால் கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், தன்னுடைய உயரதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்தவர், கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. அதனால் கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், இறந்து கிடந்தவர் யாரென்று விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் சதீஷ்குமார் (24), பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.

சரத்குமார்

இதையடுத்து சதீஷ்குமாரை கொலை செய்தது யார் என்று போலீஸார் தேடிவந்த நிலையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த சரத்குமார் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது கடந்த 3-ம் தேதி நடந்த தகராறில் சதீஷ்குமாரை கொலை செய்து சடலத்தை டூவிலரில் வைத்து பி.பி.சி.எல் கால்வாயில் வீசியதாகத் தெரிவித்தார். இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய ஸ்குரு டிரைவர், கத்தி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான சரத்குமாரும் சதீஷ்குமாரும் நண்பர்கள். இருந்தபோதிலும் எதற்காக இந்தக் கொலை நடந்தது என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட சதீஷ்குமாரும் அவரின் நண்பர் சரத்குமாரும் கடந்த 3-ம் தேதி இரவு வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போதுதான் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சரத்குமார், தன்னுடைய நண்பன் சதீஷ்குமாரை ஸ்குரு டிரைவராலும் கத்தியாலும் சரமாரியாக குத்திக் கொலை செய்திருக்கிறார். பின்னர் சதீஷ்குமாரின் சடலத்தை எப்படி மறைப்பது என தெரியாமல் தவித்திருக்கிறார். அதன்பிறகு சதீஷ்குமாரின் வாய், கை, கால்களை கட்டி மூட்டைக்குள் அடைத்திருக்கிறார். பின்னர் அதை டூவிலர் மூலம் எடுத்து கால்வாயில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் சரத்குமாரைக் கண்டறிந்து அவரைக் கைது செய்துவிட்டோம். இருப்பினும் சரத்குமார் கொலைக்காக சொல்லும் காரணம் நம்பும்படியாக இல்லை. அதனால் தொடர்ந்து அவரிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel