TVK: “அறவழியில் போராடியவர்களை அராஜகமாக கைது செய்திருக்கிறார்கள்!” – விஜய் காட்டம்!

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு நேரும் வன்கொடுமைகளை எதிர்த்து தவெக சார்பில் தமிழகம் முழுவதும் அத்தனை மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சில மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்த தவெகவினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட தவெகவினரை விடுதலை செய்யக் கோரி விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

tvk vijay

விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ‘தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.

தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

tvk vijay

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்.’ எனக் கூறியிருக்கிறார்.