“பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர நடவடிக்கை வேண்டும்” -டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை

“சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான புகார் சதவிகிதம் தற்போது அதிகரித்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிரமாகப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் காவல்துறையினரிடம் பேசியுள்ளார்.

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழக டி.ஜி.பி சங்கர்ஜிவால் தலைமையில் மதுரை மாநகர், மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்ட காவல்துறையினருக்குக் குறைதீர் முகாமும், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இரண்டாவது நாளான நேற்று சிறப்பாகப் பணியாற்றிய 43 காவல்துறையினருக்கு நற்பணி சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் டி.ஜி.பி சங்கர் ஜிவால் பேசும்போது, “இது ஒரு மகிழ்ச்சியான நாள். பொதுவாகச் சட்டம் ஒழுங்கு குறித்து ஐஜி, எஸ்பி போன்றவர்கள்தான் ஆய்வு நடத்துவோம். தற்போது ஏடிஎஸ்பி, டிஎஸ்பி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிரமாகப் புலனாய்வு செய்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். போதைப்பொருள் குற்ற வழக்குகளைத் தென்மண்டல காவல்துறை சிறப்பாகக் கையாண்டுள்ளது. இருப்பினும் போதைப்பொருள் கடத்தல் விற்பனை குற்றங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்போது இணைய வழிக்குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது. அதுபோன்ற குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,

ஒரு காலகட்டத்தில் சைபர் கிரைம் தொடர்பாக ஒன்று, இரண்டு எனப் பதிவான வழக்குகள் தற்போது 100 எனப் பதிவாகிறது. முக்கியமாக ரவுடிகளைக் கட்டுப்படுத்துவதற்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அது தொடர்பான புகார்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

சங்கர் ஜிவால்

போதைப்பொருளைத் தடுப்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான பல்வேறு அறிவுரைகளும் கொடுத்து வருகிறோம். மேலும் தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. குற்றங்களைப் பொறுத்தவரைத் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் உள்ளது. அது பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தித் தடுப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம். காவல்துறையினர் நலன் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். 26 கருத்துக்கள் அடிப்படையில் காவலர் முதல் சிறப்புச் சார்பு ஆய்வாளர் வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது‌” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் துணை ஆணையர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel