வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் மதுரை மாநகராட்சியில் மிக அதிகமாக கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது சமீபத்தில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, “பலகோடி ரூபாய் மதிப்பிலான மாநகராட்சி சொத்துகள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது அதை மீட்க மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், “அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் திமுக மண்டலத்தலைவர் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகளுடன், மக்கள் குறை தீர் கூட்டம், ஆய்வுக் கூட்டம் என நடத்தி அதில் திமுக வட்டச் செயலாளர்களை கலந்து கொள்ள வைத்து, அவர்கள் சொல்லும் பணிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட நாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால நீதிமன்றம் செல்வோம்” என்று அதிமுக கவுன்சிலர்கள் புகார் எழுப்பியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் கொடுத்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜாவிடம் பேசியபோது, “மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி அமைச்சர் மூர்த்தியின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதால், அத்தொகுதியில் மாநகராட்சி அதிகாரிகளுடன், திமுக வட்டச் செயலாளர்களையும் அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களை புறக்கணிப்பது ஜனநாயக விரோதம். அமைச்சர் மூர்த்தி மேற்குத் தொகுதியில் நலத்திட்ட உதவி எனும் பெயரில் என்னதான் வாரி வழங்கினாலும், எங்கள் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ நான்காவது முறையாக வெற்றி பெறுவது உறுதி” என்றவர்,

தொடர்ந்து பேசும்போது, “மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை ஒவ்வொரு மாமன்றக் கூட்டத்திலும் ஆதாரத்துடன் தொடர்ந்து பேசி வருகிறேன். எதற்குமே நடவடிக்கை கிடையாது. முல்லைபெரியாறு கூட்டுக்குடி நீர் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வருகிறது. ஆனால், 100 வார்டுகளிலும் குடிநீர் சரியாகச் செல்கிறதா என்று சோதனை ஓட்டம் நடத்தப்படவில்லை. அடுத்ததாக, ஆயிரக்கணக்கான வணிகக் கட்டடங்களுக்கு, குடியிருப்புகள் என்ற பெயரில் குறைவாக வரி வசூலிக்கப்படுகிறது. இதன் ஆதாயம் யாருக்கு செல்கிறது? சாமானிய மக்களின் வீடு, கடைகள் வரி செலுத்தவில்லையென்றால் மாநகராட்சி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கிறார்கள். மதுரையிலுள்ள பெரிய நகைக்கடையும், தங்கும் விடுதியும் நீண்டகாலமாக பலகோடி ரூபாய் வரி பாக்கியை கட்டாமல், வழக்கு தாக்கல் செய்து இழுத்தடித்து வருகிறார்கள். அதற்கு எதிராக மாநகராட்சி வழக்கறிஞர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
100 வார்டுகளிலும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் மிக மோசமாக உள்ளது. கழிவு நீரை வெளியேற்றும் பம்பிங் ஸ்டேஷனில் உள்ள 212 மோட்டார்களில் 127 மட்டுமே செயல்படுகிறது. இதனால் பல வார்டுகளில் கழிவு நீர் வெளியே பொங்கி சாலையெங்கும் சாக்கடையாக ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கடைசியில் கழிவுநீர் வைகையாற்றில் கலந்து நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. கோயில் நகரம் குப்பை நகரமாக உள்ளது என்று சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கும் அளவுக்கு மாநகராட்சியின் லட்சணம் உள்ளது.

பெரும்புள்ளிகள் வைத்துள்ள பல கோடி வரி பாக்கியை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்காமல் எளிய மக்கள் வளர்க்கும் நாய், பூனைக்கு உரிம கட்டணத்தை பல மடங்கு கட்டணம் உயர்த்தியுள்ளனர். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் அலுவலர்களும், வழக்கறிஞர் குழுவினரும் மோசமாக உள்ளதை துணை மேயரே தெரிவித்துள்ளதன் மூலம் எங்கள் குற்றச்சாட்டு எந்தளவுக்கு உண்மை என்பது தெரியும். இதுகுறித்து ஒவ்வொரு கூட்டத்திலும் நாங்கள் பேசி வந்தாலும் எந்த பதிலும் இல்லை நடவடிக்கையும் இல்லை” என்றார்.
எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு குறித்து மேயர் தரப்பில் கேட்டதற்கு, `விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதில் அளித்துள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
