பீகார் : யார் தலைமையில் தேர்தல்? – இந்தியா கூட்டணிக்குள் காங்கிரஸ் vs ஆர்.ஜே.டி யுத்தம்

பீகார் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதில் இந்தியா கூட்டணிக்குள் பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது.

பீகார் தேர்தல்

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

பலமுறை கூட்டணியை மாற்றினாலும் முதல்வர் நாற்காலியை இழக்காத ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு வரை இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த நிதீஷ் குமார் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து கூட்டணியில் இருந்து வெளியேறியிருந்தார். அது மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இந்தியா கூட்டணிக்கு காவு வாங்கி இருந்தது.

நிதிஷ் குமார்

அதன் பிறகு ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி என அடுத்தடுத்த சட்டப் பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்விவரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி பயணத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்திலும் கட்டாயத்திலும் காங்கிரஸ் கட்சி உள்ளது.

அவர்கள் நோக்கம் அதுவாக இருந்தாலும், செயல்பாடுகள் அதற்கு அப்படியே எதிர் மாறாக இருக்கிறது என்பதுதான் பீகாரில் தற்பொழுது நிலவும் களச் சூழல்.

பீகார் காங்கிரஸ்

பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவும் உள்கட்சி மோதல் மிகப்பெரியதாக வெடித்துள்ளது. அம்மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான கிருஷ்ணா அல்லவறு, ” சட்டப்பேரவை தேர்தலுக்குள் உள்கட்சி பூசல்கள் சரி செய்யப்படவில்லை என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவதை யாராலும் தடுக்க முடியாது” என ஓப்பனாக கூறியதில் இருந்தே எந்த அளவிற்கு பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் நிலைமை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

யார் தலைமையில் இந்தியா கூட்டணி?

ஏற்கனவே நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் சூழலில் மற்றொரு பிரச்சனையாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிய ஜனதாதள கட்சியுடனும் பஞ்சாயத்தை தொடங்கி இருக்கிறார்கள் பீகார் காங்கிரஸ்காரர்கள்.

தங்கள் கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவை பீகார் முதல்வர் வேட்பாளர் முகமாக முன்னிறுத்தி ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி பிரச்சாரங்களை தொடங்கியுள்ள நிலையில், முதலாளாக முந்திக்கொண்டு எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது கூட்டணி கட்சியான காங்கிரஸ்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மகாகட்பந்தன் கூட்டணி வெற்றி பெற்று அதில் ராஷ்டிர ஜனதாதள கட்சி அதிக இடங்களை பெற்றால் மட்டும் தான் தேஜஸ்வி யாதவ் முதல்வராக ஆக முடியும். அதுவும் கூட சோனியா காந்தி ராகுல் காந்தி உள்ளிட்டோர்தான் இறுதி முடிவை எடுப்பார்கள் என பீகார் சட்டப்பேரவைக்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் சர்மா திட்டவட்டமாக கூற, அதனை உடனடியாக மறுத்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சி காங்கிரசின் இந்தக் கூற்றை தங்களால் ஏற்க முடியாது 2025 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலை மகா கட்பந்தன் கூட்டணியின் தலைவராக முன் நின்று தேஜஸ்வி யாதவ் தான் பிரச்சாரங்களை முன்னெடுப்பார் என கூற புகைச்சல் அதிகரித்துள்ளது.

அஜித் சர்மா

வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்க்கு அவலை கொடுத்தது போல தேஜஸ்வி யாதவின் தலைமையை கூட்டணி கட்சியான காங்கிரசே ஏற்க வில்லை. பின்னர் பீகார் மக்கள் எப்படி ஏற்பார்கள் என ஆளும் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கேள்வி எழுப்ப, உங்களால் தான் எல்லா பிரச்சனையும் வந்திருக்கிறது என ராஷ்டிர ஜனதா தளம் காங்கிரசை விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இன்னும் தேர்தல் அறிவிப்பே வரவில்லை. தேர்தல் நடந்தாலும் வெற்றிக்கான சூழலை ஆராய வேண்டியுள்ளது. ஆனால் அதற்குள் முதல்வர் நாற்காலிக்காக கூட்டணியில் இருக்கும் இரண்டு கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் கொண்டாட்டத்தை பீகார் மாநிலத்தில் கொடுத்திருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel