பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையின் ( CISF ) 56-வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டத்தையொட்டி, இன்று காலை, ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் செயல்பட்டு வரும் சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இந்தச் சூழலில்தான், அமித் ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டை பகுதியில் மர்ம நபர்களால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பா.ஜ.க-வினரைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. அமித் ஷா புகைப்படத்துக்குப் பதிலாக இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் புகைப்படத்தை வேண்டுமென்றே பதிவிட்டு… `இந்தியாவின் இரும்பு மனிதரே… வாழும் வரலாறே வருக, வருக!’ எனக் குறிப்பிட்டதோடு, ராணிப்பேட்டை பா.ஜ.க-வைச் சேர்ந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் அருள்மொழி என்ற பெண் பிரமுகரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப் பரவல்
இன்று காலை, இந்த போஸ்டர் படத்தை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தி.மு.க நிர்வாகிகள்தான் அதிகமாகப் பதிவிட்டு பா.ஜ.க-வினரைக் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். அதன் பிறகே, இந்த போஸ்டர் பிரதான காட்சி ஊடகங்களிலும் செய்தியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த போஸ்டர் விவகாரத்தின் உண்மைத்தன்மை குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பா.ஜ.க பெண் பிரமுகர் அருள்மொழி தன்னிலை விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அதில், “நான் அருள்மொழி. பாரதிய ஜனதா கட்சியில் மாநிலச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். போஸ்டர் ஒட்டி அமித் ஷாவை அவமானப்படுத்தியிருக்கின்றனர். அந்த போஸ்டரில் என் பெயரையும் குறிப்பிட்டு அசிங்கப்படுத்தியிருக்கின்றனர். அந்த போஸ்டருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஒட்டவில்லை. ஆனால், என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இதனால், அதிகமான மனஉளைச்சலில் இருக்கின்றேன். எனவே, அவதூறாக போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகாரளிக்க உள்ளேன்’’ என்றார்.
சிசிடிவி கேமரா காட்சிகளை
இது தொடர்பாக, ராணிப்பேட்டை பா.ஜ.க நிர்வாகிகள் சிலரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “ராணிப்பேட்டை நகர்ப் பகுதி, ஆற்காடு மேம்பால பகுதி, காவல் நிலையம் எதிரே எனப் பல்வேறு இடங்களில் இந்த அவதூறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் ஒட்டியவர்களும், ஒட்டச் சொன்னவர்களும் சிக்குவார்கள். காவல்துறையில் புகாரளித்திருக்கிறோம். கண்டுபிடிப்பார்கள் என நம்புகிறோம்’’ என்றனர்.

அமித் ஷா, சந்தான பாரதிக்கு வித்தியாசம்
ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க பிரசாரப் பிரிவுத் தலைவர் முருகன் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “களங்கம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறோம். எங்கள் கட்சியின் புரோட்டோக்கால் என்னவென்றால், முதலில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும், அடுத்ததாக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தையும், அருகில் பாரத மாதாவின் படத்தையும்தான் போட்டு போஸ்டர் அச்சடிப்போம். அதுவுமில்லாமல், அமித் ஷா, சந்தான பாரதிக்கு வித்தியாசம் தெரியாமல், எங்கள் கட்சியில் யாருமில்லை. இது முழுக்க முழுக்க சதிச் செயல்’’ என்கிறார் கொந்தளிப்போடு.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
