கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க தலைமையில் ஒரு கூட்டணியும் தனித்தனியே போட்டியிட்டன. தேர்தலில் இரண்டு கூட்டணியும் ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அதன்பிறகும் கூட, பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இவ்வாறிருக்க, இரண்டு நாள்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க-வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க தயாராக இருக்கிறது. தி.மு.க மட்டும்தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எதிரி இல்லை. தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் அதுதான் எங்கள் குறிக்கோள். அ.தி.மு.க கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பாக ஆறு மாதங்கள் இருக்கும்போது சொல்லப்படும்.” என்று கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த பதில், மழுப்பலாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதனால், விகடன் வலைத்தளப் பக்கத்தில் இது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், “கூட்டணி குறித்த எடப்பாடி பழனிசாமியின் பதில்… அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மீண்டும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதா?” என்று கேள்வி கேட்கப்பட்டு, “ஆம், இல்லை, தேர்தல் நேரத்தில்தான் தெரியும்” என்று மூன்று விருப்பங்களும் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் அதிகபட்சமாக 68 சதவிகிதம் பேர் “அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மீண்டும் உருவாகும்” என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 21 சதவிகிதம் பேர் தேர்தல் நேரத்தில்தான் தெரியும் என்றும், 11 சதவிகிதம் பேர் இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிறு அன்று துபாய் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், 24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவும், நியூசிலாந்தும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மோதுவதால், யார் சாம்பியன் பட்டம் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியிருக்கிறது. இது தொடர்பாக, விகடன் வலைத்தளப் பக்கத்தில் இறுதிப்போட்டியில் யார் வெல்வார்கள் என்று கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்க பின்வரும் லின்க்கை கிளிக் செய்யவும்… https://www.vikatan.com/