மும்மொழிக் கொள்கை: “முனைவருக்கு LKG மாணவன் பாடமெடுப்பது போலிருக்கிறது” – அமித் ஷாவை சாடிய ஸ்டாலின்

தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், மத்திய பா.ஜ.க அரசுக்கும் தமிழ்நாடு தி.மு.க அரசுக்கும் இடையே பெரும் விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் அமைந்துள்ள மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையின் (CISF) 56-வது ஆண்டு ( ESTABLISHED 1969 ) எழுச்சி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்துகொண்டு உரையாற்றினார்.

அமித் ஷா
அமித் ஷா

அந்த உரையில், “மத்திய அரசு நடத்தும் மத்திய ஆயுதக் காவல் படைகள் ( Central Armed Police Forces – BSF, CISF, CRPF, NSG, ITBP, SSB ) ஆள்சேர்ப்பு நடைமுறை தேர்வுகளை, பெங்காலி, கன்னடம், தமிழ் மற்றும் பிற தாய்மொழிகளில் எழுத பிரதமர் மோடி வழிவகை செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை துவக்க வேண்டுமென்று தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு ஆண்டுகளாக இதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்று அமித் ஷா விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், அமித் ஷாவின் இத்தகைய பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் எதிர்வினையாற்றியிருக்கிறார். அந்தப் பதிவில், “ `மரம் அமைதியை விரும்பினாலும், காற்று அதை அனுமதிப்பதில்லை.’ நாங்கள் பாட்டுக்கு வேலை செய்துகொண்டிருந்த எங்களை, தொடர்ச்சியாகக் கடிதம் எழுதத் தூண்டியவர் மத்திய கல்வி அமைச்சர். தன்னுடைய இடத்தை மறந்துவிட்டு இந்தித் திணிப்பை ஏற்கும்படி ஒட்டுமொத்த மாநிலத்தையும் அச்சுறுத்தத் துணிந்தார். இப்போது, ஒருபோதும் வெல்ல முடியாத ஒரு போராட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்ததன் விளைவுகளை அவர் எதிர்கொள்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாடு ஒருபோதும் சரணடையாது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் தமிழ்நாடு, 2030-க்குள் இவற்றையெல்லாம் அடைய வேண்டும் என்று இந்தக் கொள்கை நிர்ணயித்திருக்கும் இலக்குகளை அடைந்துவிட்டது. இப்போது இவர்கள் செய்வது, முனைவருக்கு (PhD holder) எல்.கே.ஜி மாணவன் பாடம் எடுப்பது போலிருக்கிறது. திராவிடம், டெல்லியிலிருந்து கட்டளைகளைப் பெறுவதில்லை. மாறாக, நாட்டிற்கான பாதையை அமைக்கிறது.

தற்போது, தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் மும்மொழிக் கொள்கை கையெழுத்துப் பிரசாரம் சிரிப்பலையாகிவிட்டது. நான் சவால் விடுகிறேன், முடிந்தால் 2026 தேர்தலில் தங்களின் முக்கிய அஜெண்டாவாக இந்தித் திணிப்பைக் கையிலெடுக்கட்டும். வரலாறு தெளிவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் அல்லது பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தி.மு.க-வுடன் இணைந்தனர். எனவே, இந்தி காலனித்துவம் வருவதைத் தமிழ்நாடு பொறுத்துக்கொள்ளாது.

திட்டங்களின் பெயர்கள் முதல் மத்திய அரசு நிறுவனங்களுக்கு விருதுகள் வரை என, நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்களை மூச்சுத் திணற வைக்குமளவுக்கு இந்தி திணிக்கப்பட்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால், இந்தியாவில் இந்தி ஆதிக்கம் தகர்க்கப்பட்ட பிறகும், முன்னின்றது தி.மு.க-தான் என்பதை வரலாறு நினைவுகொள்ளும்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.