`ஆளுநர் ஏன் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்?’ – ராஜேந்திர பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் தொடங்கி, முக்கியமான சட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி அனுப்பி வைக்கும் கடிதங்கள் வரை நிலுவையில் போட்டு வைப்பது வழக்கமான ஒரு செயல்பாடாகவே செய்து வருகிறார் என்பது ஆளும் அரசின் குற்றச்சாட்டு. அவ்வப்போது நீதிமன்றங்களை நாடி இது போன்ற விவகாரங்களில் தமிழ்நாடு அரசு நிவாரணம் பெற்று வருகிறது.

அதேபோன்று மற்றொரு முக்கிய கோப்பு ஒன்றை நிலுவையில் போட்டு வைத்ததால், தற்போது உச்ச நீதிமன்றத்தின் அதிருப்திக்கு ஆளாகி இருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி. இந்த முறை அவர் வாங்கி கட்டிக் கொண்டது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய கோப்பினை கிடப்பில் போட்டு வைத்ததற்காக.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

கடந்த2016 – 2021 வரையில் அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.

ரவீந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பிறகு தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார் பிறகு அவருக்கு உச்ச நீதிமன்றம் பிணையும் வழங்கி இருந்தது.

சிபிஐ-க்கு மாற்றி…

ஆனால் `வழக்கு மிகவும் தாமதமாக நடைபெறுகிறது’ எனக் கூறி புகார் அளித்த ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய, விசாரணையை விரைவாக நடத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது என மீண்டும் ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, இந்த முறை சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

இதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆளுநர் RN Ravi| உச்ச நீதிமன்றம்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, “ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதற்கான அனுமதி கேட்டு கோப்புகளை தமிழ்நாடு ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர் அதனை நிலுவையில் போட்டு வைத்திருக்கிறார். அதனால் தான் தாமதம் ஏற்படுகிறது” என தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கினை ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்ததோடு, இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு ஆளுநரிடம் இந்த விவகாரத்தை மீண்டும் எடுத்து செல்ல அனுமதியும் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மிட்டால் மற்றும் எஸ் வி என் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.

ஆளுநரை அணுகினீர்களா?

அப்போது நீதிபதிகள், `இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரை அணுகினீர்களா?’ என தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு `ஆம்’ என பதில் அளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள், `கடந்த பிப்ரவரி நான்காம் தேதி பிப்ரவரி 28ஆம் தேதி மார்ச் ஐந்தாம் தேதி என மூன்று முறை இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டும் அவர் எந்த ஒப்புதலும் தராமல் இருக்கிறார்’ என தகவல் கூறினர்.

அப்பொழுது அதிருப்தி அடைந்த நீதிபதிகள், `தமிழ்நாடு ஆளுநர் ஏன் இந்த விவகாரத்தில் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்?’ என சற்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

`மேலும் இது மிகவும் முக்கியமான ஒரு விவகாரமாக இருக்கின்றது. நாங்களும் அதை அப்படித்தான் பார்க்கின்றோம். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் இந்த கோப்புகளை நிலுவையில் போட்டு வைத்தது ஏன்?’ என மீண்டும் கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள், “இதேபோன்று மூன்று நான்கு கோப்புகளை இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்” என மீண்டும் குற்ற சாட்டை முன் வைத்தனர்.

ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிசாமி

இதனை அடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், `இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றும் `தேவைப்பட்டால் பிரமாண பத்திரத்தை மட்டும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம்’ என தெரிவித்து வழக்கின் விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

பிறகு ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `சிபிஐ விசாரணைக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், `தமிழ்நாடு காவல்துறையோ அல்லது சிபிஐயோ எதுவாக இருந்தாலும் நீங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட போகிறீர்கள். பிறகு ஏன் சிபிஐ விசாரணையை எதிர்க்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார்கள்.

`ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு இருக்கின்றது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது மீண்டும் சிபிஐ விசாரணை என்றால் முதலில் இருந்து வழக்கின் விசாரணை நடைபெறும் அதனால்தான் எதிர்க்கிறோம்’ என பதில் அளித்தனர் நீதிபதிகள் இதனை பதிவு செய்து கொண்டனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel