‘உங்களால் தான் அமெரிக்காவில் நிறைய மக்கள் இறந்துள்ளனர்…’ – ட்ரூடோவிடம் போனில் பேசிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பும், பின்பும் ட்ரம்ப் கடுமையாக சாடி வந்த நாடுகளில் ஒன்று, கனடா.

ஒருகட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு வார்த்தை போர்கூட நடந்தது. இந்த நிலையில், நேற்று கனடா பிரதமர் ட்ரூடோ அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு போன் செய்துள்ளார். இந்த அழைப்பு கிட்டத்தட்ட 51 நிமிடங்கள் நீண்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ வரி விதிப்பு குறித்து போன் செய்து பேசினார். நான் அவரிடம், ‘கனடா மற்றும் மெக்சிகோ எல்லை வழியே வந்த ஃபென்டனைல் போதை மருந்தால் பலர் இறந்திருக்கிறார்கள்’ என்று கூறினேன்.

நிலைமை தற்போது ஓரளவு சரியாகிவிட்டது என்று கூறினார். ‘ஆனால், அது போதாது’ என்று கூறினேன். எப்படியோ, அந்த போன்கால் நட்பு ரீதியில் தான் முடிந்தது. கனடாவில் தேர்தல் எப்போது நடைபெறும் என்று அவரால் என்னிடம் கூறமுடியவில்லை. அதனால், ‘அப்படி என்ன போய்க்கொண்டிருக்கிறது?’ என்ற ஆர்வம் எனக்கு தோன்றியது. பிறகு தான், அவர் இதை அனைத்தையும் பதவியில் இருக்கத்தான் செய்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். குட் லக் ஜஸ்டின்!” என்று பதிவிட்டுள்ளார்.

“நான் ஆளுநர் (ட்ரூடோ தனது கனட பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால் ட்ரம்ப் ‘ஆளுநர்’ என்று பதிவிட்டுள்ளார்) ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசும்போது, அவருடைய எல்லை கொள்கைகள் தான் இப்போது நமக்கும், கனடாவிற்கு இருக்கும் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டேன். அவருடைய பலவீனமான எல்லை கொள்கைகளினால் தான் அமெரிக்காவிற்குள் மிக பெரிய அளவிலான ஃபென்ட்னைல், சட்டத்திற்கு புறம்பான ஏலியன்ஸ் வந்திருக்கின்றனர். அந்தக் கொள்கைகள் தான் பல மக்களின் இறப்பிற்கு காரணம்” என்று இன்னொரு ட்ரூத் வலைதள பதிவில் கூறியுள்ளார்.