சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் ஊசி போட்டு கொல்லப்பட்ட காதலி – இரண்டு புது காதலிகளுடன் காதலன் கைது

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள, தனியார் விடுதியில் திருச்சியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். அப்பெண்ணை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை. அவரின் செல்போன் ஸ்விட்ச்ஆஃப் ஆன நிலையில் எங்கு போனார் என்பது தெரியவில்லை. இதையடுத்து விடுதி வார்டன் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மாயமான இளம் பெண் செல்போனுக்கு திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்தது பதிவாகி இருந்தது. மேலும் அப்பெண்ணின் செல்போன் ஏற்காடு மலைப்பாதையுடன் சுவிட்ச் ஆப் ஆனதும் தெரிய வந்தது. இதை அடுத்து இளம் பெண்ணுடன் பேசிய திருச்சி வாலிபரை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாயமான பெண்ணை கொலை செய்து ஏற்காடு 60 அடி பாலம் அருகே 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசியதாக பகிர் தகவலை தெரிவித்துள்ளார்.

கொலை

இதையடுத்து பள்ளப்பட்டி ஏற்காடு போலீஸார் பள்ளத்தில் அழுகிய நிலையில் கிடந்த இளம் பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியான.

கொலையான பெண், திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்த லோகநாயகி என்கின்ற அல்பியா. இவருக்கும் பெரம்பலூர் அருணாச்சல கவுண்டர் நகரை சேர்ந்த பிஇ நான்காம் ஆண்டு படித்து வரும் அப்துல் ஹபீஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. நான்கு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். அல்பியா 2023 ஆம் ஆண்டு சேலம் வந்து தனியார் விடுதியில் தங்கியிருந்து ஆசிரியர் தேர்வுக்காக ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.

லோக நாயகி

அப்துல் ஹபீஸ் அவ்வப்போது விடுமுறை நாட்களில் சேலம் வந்து அல்பியாவுடன் இருந்து வந்துள்ளார். இதனிடையே தற்போது அப்துல் ஹபீஸ் சென்னை ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காவியா சுல்தானா என்பவருடன் பழகுவதை அறிந்த அல்பியா, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார். தன்னை தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால் உன்னையும் குடும்பத்தையும் கொல்லாமல் விடமாட்டேன் என அல்பியா மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அல்பியாவை கொலை செய்ய தனது புது காதலி காவியா சுல்தானாவுடன் அப்துல் ஹபீஸ் திட்டம் தீட்டி உள்ளார்.

மேலும் அப்துல் ஹபீஸ் மோனிஷா என்ற பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். மோனிஷாவிடம், `தனது உறவினர் பெண்ணின் சகோதரரை அல்பியா திருமணம் செய்து குடும்பம் நடத்திய நிலையில், அவரை பாட்டிலால் அடித்து கொலை செய்துவிட்டார். அதற்கு அல்பியாவை பழிவாங்க வேண்டும் அவரை கொல்ல உதவி செய்ய வேண்டும்’ என ஒரு பொய்யான கதையை கூறி மூளை செலவை செய்து சம்மதிக்க வைத்துள்ளார்.

அதன்படி அவர் ஊசியை கொண்டு வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி பைக்கில் அப்துல் ஹபீஸ் மோனிஷா, காவியா சுல்தானா ஆகிய மூன்று பேரும் சேலத்துக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வாடகைக்கு டிரைவர் இல்லாமல் காரை எடுத்துக் கொண்டு அல்பியா தங்கி இருக்கும் விடுதிக்கு சென்று விடுதியில் இருந்த அல்பியாவை வெளியே வரவழைத்துள்ளனர்.

கைது

அவரிடம்இருவரையும் தோழிகள் என அப்துல் ஹபிஸ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் அல்பியாவை காரில் அழைத்துக் கொண்டு ஏற்காடு செல்லும் சாலையில் 60 அடி பாலம் அருகே வந்தவுடன், காவியா சுல்தானா, அப்துல் ஹபீஸ் ஆகிய இருவரும் திடீரென அல்பியாவை பிடித்துக் கொண்டனர். அப்போது மோனிஷா மூச்சு திணறல் ஏற்படுத்த அல்பியா உடலில் ஊசியை போட்டுள்ளார். இதனால் அல்பியா மூச்சுத் திணறி இறந்துள்ளார். பின்னர் கொலையான அல்பியாவின் உடலை 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு மூவரும் காரில் தப்பி சென்றது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ஹபீஸ், காவியா சுல்தானா, மோனிஷா ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.